‘அல்லாஹ்’ விவகாரம் பக்காத்தான் ஆதரவை பாதிக்காது

pakat‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீதான பாஸ் syura மன்றத்தின் நிலையை முஸ்லிம் அல்லாதார் பலர் கண்டித்துள்ள போதிலும் வரும் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட்டுக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஏனெனில் பாஸ் கட்சி சபா, சரவாக்கில் சில இடங்களில் மட்டுமே போட்டியிடுவதாகும். தீவகற்ப மலேசியாவில் பெரும்பாலான வாக்காளர்கள் முடிவு செய்து விட்டனர் என்றும் இஸ்லாமியக் கட்சியின் நேர்மாற்றம் அவர்களுடைய முடிவை மாற்றிக் கொள்வதற்கு பெரிய விஷயம் அல்ல என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.

என்றாலும் கிறிஸ்துவர்களில் பெரும்பாலோர் சபா சரவாக்கில் வாழ்வதால் பாஸ் கட்சியின் பங்காளிகளான பிகேஆர், டிஏபி ஆகியவற்றுக்கான ஆதரவு பாதிக்கப்படலாம்.

pakat1மலேசிய மக்கள் தொகையில் கிறிஸ்துவர்கள் 10 விழுக்காட்டினர். அவர்களில் பெரும்பகுதியினர் சபா சரவாக்கில் உள்ளனர். பைபிள் மலாய் மொழிபெயர்ப்பான அல்கித்தாப்பில் அவர்கள் தங்கள் இறைவனை வருணிக்க ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

முஸ்லிம் ஆதரவை வலுப்படுத்துவதற்காக பாஸ் தனது நிலையை நேர்மாறாக மாற்றிக் கொண்டது என யூனிமாஸ் என்ற சரவாக் மலேசியப் பல்கலைக்கழக் அரசியல் ஆய்வாளர் பைசால் ஷாம் ஹாசிஸ் கூறினார்.

என்றாலும் முஸ்லிம் அல்லாதார் அதிக எண்ணிக்கையில் வாழும் குறிப்பாக தீவகற்ப இடங்களில் பாஸ் கட்சிக்குப் பாதிப்பு ஏற்படும்.

“அது பாதிக்கும். ஆனால் எவ்வளவு என்பது எனக்குத் தெரியாது. பிரச்சாரத்தின் போது மற்ற பெரிய விஷயங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பினால் அந்தப் பிரச்னை பின்னுக்கு தள்ளப்பட்டு விடும்,” என அவர் இன்று மலேசியாகினியிடம் சொன்னார்.

வாக்காளர்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டனர்

அல்கித்தாப்பில் கிறிஸ்துவர்கள் அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்ற பாஸ் நிலை அதற்கு முஸ்லிம் அல்லாதாருடைய ஆதரவைக் குறைத்து விடும் எனச் சொல்லப்படுவதை இரண்டு சுயேச்சை தேர்தல் ஆய்வாளர்கள் நிராகரித்துள்ளனர்.pakat2

பாஸ் கட்சி மீது கிறிஸ்துவ அமைப்புக்கள் ஏமாற்றமடைந்திருக்கலாம். ஆனால் அந்த இஸ்லாமியக் கட்சிக்கான வாக்குகளை அது குறைத்து விடாது என மெர்தேக்கா மய்ய திட்ட இயக்குநர் இப்ராஹின் சுபியான் கூறினார்.

“நாம் நீண்ட காலமாக தேர்தலைப் பற்றிப் பேசி வருவதால் யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டனர்,” என்றார் அவர்.

கிழக்கு மலேசியாவில் பிகேஆர், டிஏபி மீது மிகக் குறைந்த அளவிலான பாதிப்பையே அது ஏற்படுத்தும் என அவர் எண்ணுகிறார்.

அந்த விவகாரம் பாஸ் கட்சிக்கான முஸ்லிம் அல்லாதார் ஆதரவை குறைக்காது என மலாயாப் பல்கலைக்கழக ஜனநாயக, தேர்தல் மய்யத்துக்குத் தலைமை தாங்கும் இன்னொரு ஆய்வாளாரான ரெட்சுவான் ஒஸ்மான் கூறினார்.

சரவாக் மாநிலத் தேர்தலிலும் முந்திய இடைத் தேர்தல்களிலும் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளைப் பார்க்கும் போது பிஎன், பக்காத்தான் ஆகிய இரண்டுமே தீவிர ஆதரவாளர்களைப் பெற்றுள்ளன என்றார் அவர்.

“அவர்கள் உறுதியானவர்கள். எளிதில் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.”

“அதற்கு மாறாக நல்ல ஆளுமை போன்ற பெரிய விஷயங்கள் பற்றியும் அண்மையில்  University Utara Malaysia (UUM)ல் கருத்தரங்குப் பேச்சாளர் ஒருவர் மாணவி ஒருவரை திட்டிய சம்பவம் பற்றியும் வாக்காளர்கள் கவலை கொண்டுள்ளனர்.”

முக்கிய நாளேடுகள் நடத்துகின்ற பக்காத்தான் எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு புதிய ஊடகங்கள் காரணமாக இளைய தலைமுறையினர் எளிதாக மயங்கி விட மாட்டார்கள் என்றும் அவர் சொன்னார்.

pakat3சீன சமூகத்தின் மீது தாக்கம் குறைவாக இருக்கும்

திங்கட்கிழமை பாஸ் syura மன்ற முடிவு அறிவிக்கப்பட்டது முதல் முக்கிய நாளேடுகள் குறிப்பாக சீன ஏடுகள் அந்த விஷயத்தை பற்றி விரிவாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஆனால் அந்த விஷயம் சீன சமூகத்தின் மீது அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது என்று கோலாலம்பூர் சிலாங்கூர் சீனர் அசெம்பிளி மண்டபத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தாங் ஆ சாய் சொன்னார்.

“அந்தப் பிரச்னை கிழக்கு மலேசியாவில் உள்ள கிறிஸ்துவர்கள் சம்பந்தப்பட்டதாகும் பொதுவாக சீனர்கள் கிறிஸ்துவையும் புத்தரையும் வருணிப்பதற்கு ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்துவதில்லை.

உயர் நீதிமன்ற முடிவே செல்லுபடியாகும்

பாஸ் நிலை பக்காத்தானுக்கான ஆதரவைக் குறைக்கக் கூடும் என சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியானும் சபா டிஏபி பிரச்சாரச் செயலாளர் சான் பூங் ஹின் -னும் கவலை தெரிவித்தனர்.

ஆகவே பாஸ் அறிக்கை ‘வெறும் அரசியல் வாதமே’ தவிர சட்டப்பூர்வத் தன்மை ஏதுமில்லை என கிழக்கு மலேசியர்களுக்கு பாரு நினைவுபடுத்தினார்.

“அது பாஸ் கட்சி நிலை தான். என்றாலும் நமது சட்டத்தைப் பொறுத்த வரையில் உயர் நீதிமன்ற முடிவே சட்டப்பூர்வமானது.”

பாரு தெரிவித்த கருத்தை சான் -னும் பகிர்ந்து கொண்டார். அந்த விஷயத்தை உள்ளூர் நாளேடுகள் இன்னும் பெரிதாக்கவில்லை என்பதால் பாதிப்பைச் சமாளிக்க முடியும் என அவர் நம்புகிறார்.

“இது வரை அந்த விஷயம் சபாவைப் பாதிக்கவில்லை. என்றாலும் அது எப்படியும் பரவி விடும் என நாங்கள் கவலைப்படுகிறோம்.”