அம்பிகா: தீவகற்பத்துக்கும் ஆர்சிஐ தேவை

1icதீவகற்பத்திலும் ‘வாக்குகளுக்கு- குடியுரிமை’ திட்டம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதை விசாரிக்க அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ) அமைக்கப்பட வேண்டும் என பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாள்களில் சாபா குடிநுழைவுமீதான பொது விசாரணையில் வெளிவந்த தகவல்களைப் பார்க்கும்போது சாட்சிகள் அரச விசாரணை ஆணையத்தில் சாட்சியமளிப்பதில் தயக்கம் கொள்வதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்று அம்பிகா தெரிவித்தார்.

1ambi“தீவகற்ப மலேசியாவிலும் அதேபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நிறைய புகார்கள் வந்திருப்பதால் இங்கும் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட வேண்டும்.

“(புகார்களுக்கு) ஆதாரங்கள் திரட்டுவது சிரமமாக இருக்கிறது. ஏனென்றால், மக்கள் தகவல் சொல்ல பயப்படுகிறார்கள். ஆனால், ஆர்சிஐ என்றால் அங்கே அவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது”, என்றவர் மலேசியாகினி தொடர்புகொண்டபோது கூறினார்.

சாபா ஆர்சிஐ விசாரணையில் சாட்சியமளித்த தேசிய பதிவுத் துறை(என்ஆர்ஐ) முன்னாள் அதிகாரிகள் சிலரின் சாட்சியங்கள், 1990-களில் சாபாவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு இரகசியமான முறையில் அடையாள அட்டைகளும் மற்ற ஆவணங்களும் வழங்கப்பட்டதாக பல ஆண்டுகளாக உலவி வந்த வதந்திகள் உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

சாபாவில் பிஎன்னின் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் அம்னோ அங்கே வலுவாகக் காலூன்றவும் குடியேற்றக்காரர்கள் வாக்களிக்க வசதிகள் செய்தி கொடுக்குமாறு தங்களுக்குப் பணிக்கப்பட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

1megatகள்ளத்தனமாக நடந்த இந்நடவடிக்கையில் முன்னாள் உள்துறை துணை அமைச்சர் மெகாட்  ஜூனிட் மெகாட் ஆயுப்புக்கும்(வலம்)  முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் அரசியல் செயலாளர் அப்துல் அசீஸ் ஷம்சுடினுக்கும் தொடர்பு உண்டு என்றும் கூறப்பட்டது.

நேற்று, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்,விசாரணைகள் தொடர்பில் அவசரப்பட்டு முடிவு செய்து விடக்கூடாது, விசாரணைகள் தொடக்கநிலையில்தான் உள்ளன என்றார்.

“சில சாட்சிகளின் சாட்சியங்களை வைத்து நாம் முடிவெடுக்கக் கூடாது. இன்னும் 167 சாட்சிகள் இருக்கிறார்கள்”. கோலாலும்பூரில் பிஎன் உச்சமன்றக் கூட்டமொன்றுக்குத் தலைமைதாங்கிய பின்னர் நஜிப் செய்தியாளர்களிடம் பேசினார்.

தேர்தல் ஆணையமும் ஆர்சிஐ விசாரணை முடியாமல் இவ்விவகாரத்தில் கருத்துரைக்க இயலாது என்று கூறிவிட்டது.