வரும் பிப்ரவரி முதல் தேதியிலிருந்து 13வது பொதுத் தேர்தலுக்கான இறுதி ஏற்பாடுகளைச் செய்து தீவிரமாக செயல்படுமாறு அம்னோ இளைஞர் தேர்தல் எந்திரங்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
எல்லா தேர்தல் மாவட்டங்களிலும் உள்ள அம்னோ இளைஞர் எந்திரங்கள் தங்கள் திட்டங்களை அமலாக்கத் தொடங்கலாம் என்றும் அதன் தலைவர் கைரி ஜமாலுதின் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு செய்தியும் கீழ் நிலையில் உள்ள மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கு விரிவான அணுகுமுறையை அம்னோ இளைஞர்கள் பின்பற்றுவதாகவும் அவர் சொன்னார்.
கைரி இன்று அலோர் ஸ்டாரில் கெடா அம்னோ இளைஞர் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
எல்லா வாக்காளர்களும் குறிப்பாக புதிய வாக்காளர்கள் வாக்களிப்பதை அம்னோ இளைஞர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.
அடுத்த பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பற்றிக் கருத்துரைத்த கைரி, அதனை முடிவு செய்யும் பொறுப்பை கட்சித் தலைவரிடம் அம்னோ இளைஞர் பிரிவு விட்டு விடுவதாகச் சொன்னார்.
தேர்தலில் அதிகமான இளைஞர் உறுப்பினர்களை நிறுத்துவது பற்றி கட்சித் தலைமைத்துவம் பரிசீலிக்கும் என்றும் அவர் நம்புகிறார்.
பெர்னாமா