கிராமாட் மாவட்டத்தில் உள்ள எல்லாப் பள்ளிக்கூடங்களில் 100 ரிங்கிட் உதவித் தொகையை வழங்கும் நிகழ்வுகளில் வாங்சா மாஜு அம்னோ தொகுதித் தலைவர் ஷாபியி அப்துல்லா ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதாக கூட்டரசுப் பிரதேச மசீச சாடியுள்ளது.
ஷாபியின் நடவடிக்கைகள் பிஎன் உணர்வை அவர் மதிக்கவில்லை என்பதைக் காட்டுவதாக கூட்டரசுப் பிரதேச மசீச கல்விப் பிரிவுத் தலைவர் எடி ஹெங் சொன்னார்.
அதனால் வாங்சா மாஜு பிஎன் -னில் ஒற்றுமை சீர்குலைந்துள்ளது. அதன் விளைவாக அடுத்த பொதுத் தேர்தலில் வாங்சா மாஜு நாடாளுமன்றத் தொகுதியை பிஎன் மீண்டும் கைப்பற்றும் வாய்ப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
“பத்து நாடாளுமன்றத் தொகுதியைப் பாருங்கள். அங்கு முறையாக நிதி உதவி விநியோகம் செய்யப்படுகின்றது. தேசியப் பள்ளிகளில் அம்னோ பேராளர்களும் சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கு கெரக்கான் பேராளர் டொமினிக் லாவ்-வும் விநியோகம் செய்கின்றனர்,” என அவர் விடுத்த அறிக்கை கூறியது.
கிராமாட் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் பெற்றோர்களிடம் 100 ரிங்கிட் ரொக்கத்தைக் கொடுப்பதற்கு ஷாபியி-யையும் வாங்சா மாஜு மசீசி தொகுதித் தலைவர் இயூ தியோங் லாக்-கையும் அழைக்க கோலாலம்பூர் கல்வித் துறை கடந்த மாதம் முடிவு செய்தது என அவர் சொன்னார்.
ஆனால் வாங்சா மாஜு அம்னோ செல்வாக்கினால் கிராமாட் மாவட்ட கல்வி அதிகாரி தாஜுடின் முகமட் நோர், எல்லா தொடக்க, இடைநிலைப் பள்ளிகளிலும் அந்த நிதி உதவியை ஷாபியி மட்டுமே வழங்க வேண்டும் என இந்த ஆண்டுத் தொடக்கத்தில் உத்தரவிட்டார் என ஹெங் தெரிவித்தார்.
“அந்த நிகழ்வுகளுக்கு உணவுப் பொருட்களை தயாரிப்பதற்கு அம்னோ பேராளர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் 1500 ரிங்கிட் கொடுத்தனர்.”
கடந்த பொதுத் தேர்தலில் வாங்சா மாஜு இடத்தில் பிஎன் வேட்பாளராக போட்டியிட்ட இயூ அந்தத் தொகுதி மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்து வருவதாக ஹெங் குறிப்பிட்டார் இயூ 2004 முதல் 2008 வரை அந்தத் தொகுதிக்கான எம்பி -யாகவும் இருந்துள்ளார்.
“எனவே வாங்சா மாஜு நாடாளுமன்றத் தொகுதியில் அவர் பிஎன் -னைப் பிரதிநிதிக்க வேண்டும். வாங்சா மாஜுவில் ஐந்து சீனத் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் சீன பிஎன் பேராளர் உதவிகளை வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்.”
“ஆனால் அவற்றில் தன்மூப்பான தந்திரங்கள் மூலம் அம்னோ ஆதிக்கம் செலுத்துகின்றது.”
ஷாபியி பிரதமரும் பிஎன் தலைவருமான நிதி அமைச்சர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசியல் செயலாளர் ஆவார். 2008 தேர்தலில் 150 வாக்கு வித்தியாசத்தில் பிகேஆர் வேட்பாளர் வீ சூ கியோங்-கிடம் இயூ தோல்வி கண்ட பின்னர் வாங்சா மாஜு-வில் போட்டியிடுவதற்கு ஷாபியி வெகு தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.
வீ பின்னர் பிகேஆர் கட்சியை விட்டு விலகி பிஎன் நட்புறவு எம்பி ஆகியுள்ளார்.
பிகேஆர் 13வது பொதுத் தேர்தலில் தனது ஒழுங்குக் குழுத் தலைவர் டாக்டர் தான் கீ குவோங்-கை வாங்சா மாஜுவில் நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பொதுத் தேர்தல் இவ்வாண்டு ஜுன் மாதத்திற்குள் நடத்தப்பட்டாக வேண்டும்.