இப்ராஹிம் அலி ‘பைபிள்களை எரியுங்கள்’ எனக் கூறியுள்ளதை ஆயர் சாடுகின்றார்

ibrahimஇறைவன் என்பதற்கு ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் பைபிள்களை எரிக்குமாறு பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி விடுத்துள்ள வேண்டுகோள் “மலேசியாவில் சிவில் விவாதங்களின் எல்லைகளை மீறிச் செல்லும் இனவெறி அறிக்கை: என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் வருணித்துள்ளார்.

“இப்ராஹிமின் இனவெறிக் கருத்துக்கள் பகிரங்கமாக சொல்லப்பட்டுள்ளதால் அதிகாரிகள் அது பற்றி என்ன செய்யப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்,” என மலாக்கா ஜோகூர் தேவாலயத் திருச்சபையின் தலைவருமான ஆயர் பால் தான் சொன்னார்.

“அந்த ஒரே மலேசியா கோட்பாடு வாக்குகளைப் பெறுவதற்கான வெறும் சுலோகம் மட்டும் தானா அல்லது பல வகையான மக்களை ஒன்றுபடுத்தும் உண்மையான அரசாங்க நோக்கமா  என்பதை நாம் காண்பதற்கு  இதுவே தருணம்,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கிறிஸ்துவர்கள் முஸ்லிம்களுடைய சமய உணர்வுகளைக் காயப்படுத்துவதை நிறுத்தும் பொருட்டு அல்கித்தாப் என அழைக்கப்படும் பாஹாசா மலேசியா பைபிள்களை பறிமுதல் செய்து அவற்றை எரிக்குமாறு முஸ்லிம்களுக்கு பாசிர் மாஸ் எம்பி-யுமான இப்ராஹிம் அலி வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

“முஸ்லிம்கள் தங்கள் சமயத்தைப் பாதுகாக்க ஒன்றுபட வேண்டும். அவர்கள் அல்லா என்ற சொல்லையும் இதர அரபுச் சொற்களையும் கொண்ட மலாய் பதிப்புக்கள் உட்பட பைபிள்களைப் பறிமுதல் செய்து எரிக்க வேண்டும். நமது உணர்வுகளை மதிக்காதது மீது நான் கொண்டுள்ள ஆத்திரத்தைக் காட்டுவதற்கு அது தான் வழி,” என இப்ராஹிம் சொன்னதாக பிரி மலேசியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

பினாங்கில் பெர்க்காசா மாநாடு ஒன்றில் தலைமை உரையாற்றிய பின்னர் அவர் நிருபர்களைச் சந்தித்தார்.