சபாவில் பதிவு செய்யப்பட்ட 946,442 வாக்காளர்களில் 5.2 விழுக்காட்டினர் புருணை, பிலிப்பீன்ஸ், இந்தோனிசிய அல்லது பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். சில தொகுதிகளில் அந்த விகிதம் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இருக்கலாம் என சபா டிஏபி சொல்கிறது.
“அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்டு பின்னர் வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களா அவர்கள் என்பதை தேர்தல் ஆணையம் ஆராய வேண்டும்,” என அதன் பிரச்சாரப் பிரிவுத் தலைவர் சான் பூங் ஹின் சொன்னார்.
சபா வாக்காளர்களில் 49,126 பேர் தங்களை புருணை, பிலிப்பீன்ஸ், இந்தோனிசிய அல்லது பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என பதிந்து கொண்டுள்ளனர். ஆனால் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். ஏனெனில் அவர்கள் தங்களை மலாய்க்காரர்கள் என பதிந்து கொண்டிருக்கலாம் என மலேசிய வாக்காளர் பட்டியல் ஆய்வுத் திட்டத்தை (Merap) மேற்கோள் காட்டி சான் தெரிவித்தார்.
சபாவில் உள்ள 26 நாடாளுமன்றத் தொகுதிகளில் அத்தகைய ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
என்றாலும் கிமானிஸ், பியூபோர்ட், பாப்பார், சிபித்தாங்- எல்லாம் சபா மேற்குக் கரையைச் சார்ந்தவை-ஆகியவற்றில் அத்தகைய 3000 ‘போலி’ வாக்காளர்கள் உள்ளனர் என சான் குறிப்பிட்டார். அந்த எண்ணிக்கை மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 10 விழுக்காட்டுக்கும் அதிகமாகும்.
“குறிப்பாக கிமானிஸ் தொகுதியில் புருணை, பிலிப்பீன்ஸ், இந்தோனிசிய அல்லது பாகிஸ்தானிய வாக்காளர்கள் 9,452 ஆகும். அந்த எண்ணிக்கை மொத்த வாக்காளர்களான 25,744 -உடன் ஒப்பிடுகையில் 36.7 விழுக்காடு ஆகும்.
“அது உண்மையில் போலியானதாலும். இயல்பு நிலைக்கு மாறானதாகும்,” என்றார் சான்.
வாக்காளர் பட்டியல் தூய்மையாக்கப்பட்டு சபா குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையம் அறிக்கை வழங்கும் வரை தேர்தலை நடத்த வேண்டாம் என அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.
சட்டப்படி ஜுன் 28க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அது நாடாளுமன்றத்தின் தவணைக் காலம் முடிந்த இரண்டு மாதங்களாகும்.