சரவாக்கில் பிஎன், வரும் தேர்தலில் ஆசிரியர்களை பிஎன் பிரச்சாரக் குழுக்களில் ஒரு பகுதியாக பயன்படுத்தக் கூடாது.
“ஆசிரியர்களுடைய வேலை நமது பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதாகும்,” என சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான் சொன்னார்.
அரசியல் என வரும் போது ஆசிரியர்கள் நடுநிலையாக இருப்பது முக்கியமாகும் என்றார் அவர்.
வெளியுறவுத் துணை அமைச்சரும் செரியான் எம்பி-யுமான ரிச்சர்ட் ரியோட் விடுத்த அறிக்கை பற்றி பாகெலாலான் சட்டமன்ற உறுப்பினருமான பியான் கருத்துரைத்தார்.
ஆசிரியர்கள் கிராமப்புற மக்களிடையே வலுவான செல்வாக்கைப் பெற்றுள்ளதால் அவர்கள் வரும் தேர்தலில் பிஎன் -னுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என ரியோட் கேட்டுக் கொண்டிருந்தார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தாம் பொறுப்பேற்ற சிறிது காலத்துக்குள் நிறையச் செய்துள்ளதால் அவருக்கு புதிய கட்டளை கொடுக்கப்படுவது முக்கியம் என்றும் ரியோட் சொன்னார்.
அவர் செரியானில் மாணவர்களுக்கு 100 ரிங்கிட் உதவித் தொகையை வழங்கிய போது பேசினார்.
“ரியோட் பிஎன் -னுக்கு ஆதரவு அளிக்குமாறு ஆசிரியர்களைக் கேட்டுக் கொள்வது சரி அல்ல. மற்ற அரசுஊழியர்களைப் போல ஆசிரியர்களும் நடுநிலையாக இருக்க வேண்டும். பிஎன் -னை ஆதரிக்குமாறு அவர்களை மிரட்டக் கூடாது.”
“ஆசிரியர்கள் முதிர்ச்சி அடைந்தவர்கள். யாருக்கு ஆதரவு அளித்து வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்,” என பியான் தெரிவித்தார்.
பணம் கொடுக்கப்பட்டது பற்றிக் குறிப்பிட்ட அவர், அந்தப் பணத்தை தமது சொந்தப் பணமாகவோ அல்லது தமது கட்சிப் பணமாகவோ ரியோட் கருதக் கூடாது என்றார்.
“அது மக்கள் பணம். அதனைப் பெறுவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு,” என பியான் சொன்னார்.