வீடாக இருக்கட்டும் நாடாக இருக்கட்டும் எங்கு தப்பு நடந்தாலும் அதனை மாணவர்கள் தட்டிக் கேட்க வேண்டும்; இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்பது வெறும் வாய்ச்சொல்லில் மட்டும் நின்றுவிடாமல் செயலிலும் நடைமுறைப்படுத்திக் காட்டவேண்டும் என்கிறார் சட்டக் கல்வி மாணவி கே.எஸ். பவானி.
செம்பருத்தி இணையத்தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், அண்மையில் வட மலேசிய பல்கலைகத்தில் (UUM) நடைபெற்ற கருத்தரங்கின்போது தனக்கும் கருத்தரங்கு நெறியாளர் சரிபாவுக்கும் இடையே இடம்பெற்ற விவாதத்தை யாரும் இனவாத ரீதியில் திசைதிருப்ப வேண்டாம் எனவும் மாணவி பவானி கேட்டுக்கொண்டார்.
இச்சம்பவம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய பவானி, இலவசக் கல்வி வேண்டும் என்ற கோரிக்கை பற்றி மக்கள் பேசத் தொடங்கி விட்டார்கள் என்றார்.
அந்நிகழ்வை நினைவுக்குக் கொண்டுவந்த பவானி தொடக்கத்திலிருந்தே அந்நிகழ்வு நடத்தப்பட்ட விதத்தில் வெறுப்படைந்ததாகக் கூறினார்.
“தலைப்பு ஒன்று. ஆனால், அங்கு பேசப்பட்டது வேறொன்று. பலவகையான அபத்தங்கள் எடுத்துக்கூறப்பட்டன. எல்லாமே ஒரு தரப்பைக் கண்டிப்பதாகவே இருந்தது. மூளையைச் சலவை செய்யும் முயற்சிபோல இருந்தது”, என்றுரைத்த அவர் அதனால்தான் அதற்கு எதிர்ப்புக் குரல் கொடுத்ததாகக் கூறினார்.
மனிதனின் முக்கிய தேவையான கல்வி இன்று விற்பனை செய்யப்படுகின்றது. இந்த கல்வி வியாபாரத்தில் பல மாணவர்கள் கல்வி கற்க முடியாமலும் கடனாளியாகவும் சிக்கித் தவிக்கின்றர்.
இதனை தடுத்துநிறுத்தவேண்டுமால் இலவசக் கல்வித் திட்டத்தை கொண்டுவரவேண்டும். இதற்கு, மலேசியர்களாகிய நாம் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் போராட முன்வரவேண்டும் என்று மாணவி பவானி அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
பவானி செம்பருத்திக்கு வழங்கிய நேர்காணல் காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்