PKFZ என்ற போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதிக்கு நிலம் வாங்கியது தொடர்பில் அரசாங்கத்தை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியாங் சிக், தமக்கு எதிரான விசாரணையில் அரசு தரப்பு “உண்மையைக் கண்டு விலகி ஒடுவது” பற்றித் தாம் ‘ஏமாற்றம்’ அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்துக்கு வெளியில் நிருபர்களிடம் அவர் பேசினார். “அரசு தரப்பு வழக்குரைஞர் உண்மையைக் கண்டு விலகி ஒடுவதால் நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன். ஆத்திரமுமடைந்துள்ளேன். உண்மையை எதிர்கொள்ள அவர் அஞ்சுகின்றார்.”
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் லிங்-கிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களைக் கைவிடுமாறு பிரதிவாதித் தரப்பு செய்து கொண்டுள்ள பிரதிநிதித்துவம் மீது முடிவு செய்வதற்காக அந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 18ம் தேதிக்கு அதற்கு முன்னர் நீதிபதி அகமட் அஸ்வானி தள்ளி வைத்தார்.
அந்தப் பிரதிநிதித்துவத்தை ஆய்வு செய்வதற்காக விசாரணை தள்ளி வைக்கப்பட வேண்டும் என அரசு தரப்பு தலைமை வழக்குரைஞரும் துணை solicitor-general II, துன் அப்துல் மஜிட் துன் ஹம்சா கோரியிருந்தார்.
தாம் ஏமாற்றப்படவில்லை எனத் தாம் உணருவதாக மகாதீர் சொல்லியிருக்கிறார். அத்துடன் PKFZ மீதான அமைச்சரவை முடிவு கூட்டு அடிப்படையில் ஏகமனதாக எடுக்கப்பட்டது என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார். அந்தத் திட்டம் அரசாங்கத்துக்கு எந்த இழப்பையும் கொண்டு வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதை லிங் சுட்டிக் காட்டினார்.
“ஏதுமறியாத மனிதர் ஒருவர் மீது குற்றம் சாட்டுவதே தவறு. இப்போது அதனைக் கண்டு அஞ்சுகின்றீர்கள்,” எனக் குறிப்பிட்ட லிங், அந்த வழக்கு இரண்டரை ஆண்டாக நீடிப்பதால் தமக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதோடு பணமும் நேரமும் விரயமாகி இருப்பதாகத் தெரிவித்தார்.