மூன்று நாடற்ற இந்தியர்கள் தங்களுக்கு மை கார்டுகள் (MyKads) கொடுக்கப்படாதது மீது நீதித் துறை மறு ஆய்வுக்கு விண்ணபித்துக் கொள்வதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
நீதிபது ஸாலேஹா யூசோப், சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் சமர்பித்த பூர்வாங்க ஆட்சேபத்தை நிராகரித்து நீதித்துறை மறு ஆய்வுக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்வதற்கு அனுமதி அளித்தார்.
அதிகாரி ஒருவரது ஆணையை எதிர்த்து வழக்காடுவதற்கு முதலில் அனுமதி கிடைக்க வேண்டும். பின்னர் அந்த நீதித் துறை மறு ஆய்வு இரு கட்டங்களாக நிகழும்.
அந்த வழக்கில் தேசியப் பதிவுத் துறைத் தலைமை இயக்குநர், உள்துறை அமைச்சு, அரசாங்கம் ஆகிய தரப்புக்கள் பிரதிவாதிகள் என எஸ் லெட்சுமி, கே சரோஜினி, கே மாலா ஆகிய அந்த மூவரும் பெயர் குறிப்பிட்டுள்ளனர்.
நீதித் துறை மறு ஆய்வு கோரும், மலேசியாவில் பிறந்த இந்தியர்கள் சம்பந்தப்பட்ட முதலாவது சோதனை வழக்கு இதுவெனக் கருதப்படுவதாக விண்ணப்பதாரர்களைப் பிரதிநிதித்த வழக்குரைஞர் லத்தீப்பா கோயா கூறினார்.
அந்த விண்ணப்பம் அற்பமானது எனக் கூறிக் கொண்டு நீதித் துறை மறு ஆய்வுக்கான முயற்சியை சட்டத்துறைத் தலைவர் ஆட்சேபித்திருந்தார்.
பிரதிவாதிகள் சார்பில் முதுநிலை கூட்டரசு வழக்குரைஞர் சம்சுல் போல் ஹசான் ஆஜரானார்.