மலேசியாவில் பிறந்திருந்தும் அல்லது பத்தாண்டுகளுக்குமேல் இங்கு வசித்திருந்தும் இன்னும் குடியுரிமை வழங்கப்படாதிருப்போருக்கு உதவ பினாங்கு அரசு ஐந்து அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது.
“சட்டவிரோதமாகக் குடியேறிய ஆயிரக்கணக்கானவர்களுக்கு குடியுரிமை வழங்கும் பிஎன், (பத்தாண்டுகளுக்குமேல் மலேசியாவில் இருந்திருப்பதால்) சட்டப்படி தகுதியுள்ளவர்களுக்கு அதை வழங்காதிருப்பது அவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதற்குத் தெளிவான சான்றாகும்”, என்று முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். .
குடியுரிமை பெறாதிருப்போரின் பிரச்னைகளைக் கவனிக்க நியமனம் செய்யப்பட்டிருக்கும் அதிகாரிகள் வருமாறு:- சியாம் ஹெங் எய்க் (தீமோர் லாவுட்); அப்துல் ரஹிம் நோர்(பாராட் டாயா); சாமி த/பெயர் கிருஷ்ணசாமி (செபராங் பிறை உத்தாரா); சுப்ரமணியம் ஆறுமுகம் (செபராங் பிறை தெங்கா); குணாளன் ரெங்கசாமி (செபராங் பிறை செலாத்தான்).
நாடற்றவர் விவகாரத்தைக் கவனிக்க மாநில அரசு மேற்கொண்டிருக்கும் இந்நடவடிக்கை சட்டவிரோத குடியேறிகளுக்கு ஈராண்டுகளில் குடியுரிமை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புரொஜெக்ட் ஐசி போன்றதல்ல என்று லிம் கூறினார்.
இந்நடவடிக்கையில், பினாங்கில் பிறந்து இன்னும் குடியுரிமை, பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை, நிரந்தர வசிப்பிடத் தகுதி ஆகியவற்றைப் பெறாதிருப்போரின் விவரங்கள் சேகரிக்கப்படும்.
“அதிகாரிகள், தகவல்களைத் திரட்டுவதுடன் பாதிக்கப்பட்டோர் பல்வேறு சான்றிதழ்களுக்காக தேசிய பதிவுத் துறை(என்ஆர்டி) யிடம் விண்ணப்பம் செய்யவும் உதவுவார்கள்”, என்றாரவர்.
நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் பணி ஓய்வு பெற்றவர்கள் என்றும் இந்நடவடிக்கைக்காக அவர்கள் ஓராண்டு ஒப்பந்தத்தில் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்று துணை முதலமைச்சர் II பி.இராமசாமி கூறினார்.
“நாடற்றோர் பிரச்னை கடுமையான பிரச்னையாகும். இங்கு நீண்டகாலம் வாழ்ந்திருந்தும், பலர் இங்கேயே பிறந்தவர்கள் என்றாலும்கூட, அவர்கள் அடையாளப் பத்திரம் எதையும் பெற்றிருக்கவில்லை”, என்றாரவர்.
பினாங்கைச் சேராதவர்களாக இருந்தாலும் உதவி கேட்டு அணுகினால் அவர்களுக்கும் அந்த அதிகாரிகள் உதவுவர் என்று இராமசாமி கூறினார்.
“இவ்விவகாரத்தில் தகவல் திரட்டுவது சிரமமான பணிதான். அது கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும்”, என்றாரவர்.