ஜாவி எழுத்துக்களில் எழுதப்பட்ட மலாய் மொழி பைபிள்களையும் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை பயன்படுத்தும் மலாய் மொழி பைபிள்களையும் எரிக்குமாறு தாம் முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுத்தது, கிறிஸ்துவர்களைப் புண்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதல்ல என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி கூறுகிறார்.
மாறாக அது கூட்டரசு அரசமைப்பை மீறுவதற்கு முயற்சி செய்கின்றவர்களுக்கு கொடுக்கப்படும் பதிலாகும் என அவர் சொன்னார்.
முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதற்கு முயலுகின்றவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தமது அறைகூவலின் நோக்கம் என்று அவர் அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேட்டிடம் கூறினார்.
“நாங்கள் கிறிஸ்துவர்களை மதிக்கிறோம். மற்றவர்களுடைய உணர்வுகளைப் புண்படுத்துவது எனது நோக்கமும் அல்ல. நாங்கள் நிறைய சகித்துக் கொண்டு விட்டோம்.”
“பினாங்கில் இடைநிலைப் பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவர்களுக்கு மலாய் மொழி பைபிள்கள் விநியோகம் செய்த ஒரு தரப்புக்கு எதிராக நாங்கள் குரல் எழுப்பிய போது பலர் ஆத்திரமடைகின்றனர்,” என இப்ராஹிம் சொன்னதாக உத்துசான் தெரிவித்தது
மலாய் மொழி பைபிள்களை விநியோகம் செய்கின்றவர்கள் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளதை அறிய வேண்டும் என சர்ச்சைக்குரிய அந்த அரசியல்வாதி சொன்னார்.
“அவர்களது நடவடிக்கையால் முஸ்லிம்கள் சமய நம்பிக்கையற்றவர்களாக மாறக் கூடும். அதனால் பிளவும் பதற்றமும் ஏற்படும்,” என அவர் மேலும் சொன்னார்.
‘இறைவனை’ குறிப்பதற்கு ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் மலாய் மொழி பைபிள்களுக்கு எரியூட்டுமாறு கடந்த சனிக்கிழமை இப்ராஹிம் முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
மலேசியாவில் முஸ்லிம்களுடைய உணர்வுகளை முஸ்லிம் அல்லாதார் தூண்டாமல் தடுப்பதற்கு அது தான் ‘ஒரே வழி’ என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
பினாங்கு ஜெலுத்தோங்கில் இடைநிலைப் பள்ளி ஒன்றின் நுழைவாயிலில் முஸ்லிம் மாணவர்களுக்கு பைபிள் பிரதிகளை இருவர் விநியோகம் செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது பற்றிக் குறிப்பிட்ட போது இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.
அவரது அறிக்கைக்கு கிறிஸ்துவ தலைவர்கள் உட்பட பல தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இப்ராஹிமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டனர்.