Universiti Utara Malaysia (UUM)ல் நடத்தப்படும் எந்த நிகழ்வுக்கும் இனிமேல் ‘Kak Listen’ என அழைக்கப்படும் ஷாரிபா ஜொஹ்ரா ஜபின் சையட் ஷா மிஸ்கின் அழைக்கப்பட மாட்டார் என அதன் துணை வேந்தர் முகமட் முஸ்தாபா இஷாக் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி அந்தப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த கருத்தரங்கு ஒன்றில் “listen, listen, listen” என்னும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டதைத் தொடர்ந்து Suara Wanita 1Malaysia (SW1M) அமைப்பின் தலைவர் மீது தடை விதிக்கப்படுகின்றது.
“அந்தக் கருத்தரங்கு இவ்வளவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் என எங்களுக்குத் தெரிந்திருந்தால் பல்கலைக்கழகம் அந்த நிகழ்வுக்கு அனுமதி கொடுத்திருக்காது என அவர் சொன்னதாக ஒரியண்டல் நியூஸ் நாளேடு தெரிவித்தது.
என்றாலும் அந்தப் பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதிகளில் உள்ள மாணவர்கள்- விடுதிகளிலிருந்து வெளியேற்றப்படலாம்- என்ற மருட்டலின் கீழ் SW1M நடத்திய கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர் என சட்டக் கல்வி மாணவியான கேஎஸ் பவானி சொல்வதை முகமட் முஸ்தாபா மறுத்தார்.
அரசாங்கத்துக்கு ஆதரவாக மாணவர்களுக்கு மூளைச் சலவை செய்வதும் அந்தக் கருத்தரங்கின் நோக்கம் என்றும் பவானி கூறிக் கொண்டிருந்தார்.
அதனை பொய் எனக் குறிப்பிட்ட முகமட் முஸ்தாபா, UUMன் தோற்றத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் பொது நெருக்குதலை பவானி உருவாக்கக் கூடாது என்றார்.
“பவானி பொய் சொல்கிறார். அது அவருடைய கருத்து ஆகும். ( மாணவர்கள் அதில் பங்கு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர் ). அந்தக் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் வெறும் குப்பை,” எனக் குறிப்பிட்ட அவர் மாணவர்களுக்கு பேச்சுச் சுதந்திரம் இருப்பதாக வலியுறுத்தினார்.
கிரடிட் நேரங்களை (credit hours) பெறுவதற்காக மாணவர்கள் புறப்பாட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை பல்கலைக்கழகம் ஊக்குவிக்கிறது என அவர் விளக்கினார். ஆனால் அவ்வாறு செய்யுமாறு அது கட்டாயப்படுத்துவதில்லை என்றார் அவர்.
பவானி அரசியல் போராளி என்பதைச் சுட்டிக் காட்டிய முகமட் முஸ்தாபா, அவரது நடவடிக்கைகளும் அறிக்கைகளும் அரசியல் நோக்கத்தினால் தூண்டப்பட்டவை என்றார்.