மக்கள் கூட்டணியின் நிழல் பட்ஜெட் மக்களின் சுமையைக் குறைத்து பலனைக் கூட்டும், சார்ல்ஸ்

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் தாக்கல் செய்யப்பட்ட  மத்திய அரசாங்கத்தின் வரவு செலவு அறிக்கைக்கு மாற்றாக மக்கள் கூட்டணி  அறிமுகப்படுத்தியுள்ள நிழல் பட்ஜெட் மக்களின் தேவைகள் மற்றும் அதிகரித்துவரும் சுமைகள் ஆகியவற்றை அறிந்து அவர்களின் சுமையைக் குறைக்கவும் பலனைக் கூட்டவும் வழி செய்கிறது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

ஏழு அத்தியாயங்கள் கொண்ட இந்த மாற்று வரவு செலவு திட்டங்களில் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை குறைக்கும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

அதில் வெளிநாட்டு பணி பெண்களைச் சாராமல் இருக்கும் வகையில், சிறுவர் பாதுகாப்பு மையங்கள் நிறுவப்படும். இது அரசு நிதியிலும் வரி விலக்கு போன்ற சலுகைகளுடன் அதிகமான பெண்களை வேலை செய்ய ஊக்குவிக்கும். 

எண்ணெய் மற்றும் இதர பொருள்களின் விலை அதிகரிக்காமல் இருப்பதற்காக,  2012 ஆண்டில் அரசு கழிவுத்தொகை RM12 பில்லியன் நிலைநிறுத்தப்படும்.

மக்கள் கூட்டணியின் புக்கு ஜிங்காவில் உறுதியளிக்கப்பட்டுள்ளது போல ஆசிரியர்களுக்கு ரிம500 ரிங்கிட் கல்வி உதவித்தொகை, பொதுவான ரிம1,100 குறைந்த பட்ச சம்பளம், மூத்த குடி மக்களுக்கு ஆண்டுதோறும் ரிம1,000 ரிங்கிட் போனஸ், குடும்ப மாதர்களுக்கு ஆண்டுதோறும் 1,000 ரிங்கிட் போனஸ், குறைந்த வருமானம் பெறுவோருக்கு “கூடுதல்” அலவன்ஸாக மாதம் ஒன்றுக்கு ரிம550 – தற்போதைய சமூக நல உதவியை ரிம300 லிருந்து ரிம550 அதிகரிப்பது, குறைந்த மற்றும் நடுத்தர விலை வீடுகள் கட்டுவதற்காக ரிம1 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்படும் என  மக்கள் கூட்டணியின் மாற்று வரவு செலவு திட்டங்கள் பற்றி சார்ல்ஸ் மேலும் விவரித்தார். 

இத்திட்டங்கள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வரையப்பட்டவை. ஆயினும் இதனைச் செயல்படுத்த வேண்டுமாயின் மக்கள் கூட்டணி புத்ராஜெயாவை கைப்பற்றியாக வேண்டும். இந்த மாற்றங்களை மக்கள் காணவேண்டுமானால் மாற்றத்தை கொண்டு வர தயாராக வேண்டும். அந்த சக்தி மக்கள் கையில்தான் உள்ளது என ஆணித்தரமாக கூறினார்.

TAGS: