கிளந்தான், திரங்கானு, பாகாங், சபா, சரவாக் ஆகிய எண்ணெய் உற்பத்தி மாநிலங்களில் வசிக்கும் மக்கள் கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து 20 விழுக்காடு எண்ணெய் உரிமப் பணத்தைக் கோருவதற்கு தங்கள் வாக்குகளை ஒர் ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என கிளந்தான் மூத்த ஆட்சி மன்ற உறுப்பினர் ஹுசாம் மூசா கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த ஐந்து மாநிலங்களிலும் மொத்தம் 96 நாடாளுமன்றத் தொகுதிகள் இருப்பதை ஹுசாம் சுட்டிக் காட்டினார்.
“நான் கிளந்தானைப் பற்றி மட்டும் பேசவில்லை. மலேசியா முழுவதையும் பற்றிப் பேசுகிறேன். அந்த எண்ணெய் உற்பத்தி செய்யும் ஐந்து மாநிலங்களைப் பற்றி முழுமையாகப் பேசுகிறேன்,” அவர் இன்று கோலாலம்பூரில் கூறினார்.
2012ம் ஆண்டுக்கான பிரதேசக் கடல் சட்டம் கனிவள, பெட்ரோலியத் துறைகள் மீதான மாநில உரிமைகள் அல்லது கட்டுப்பாடுகளை குறைத்துள்ளது குறித்தும் ஹுசாம் கவலை தெரிவித்தார்.
சபா, சரவாக்கும் பாதிக்கப்படும் எனக் கூறிய அவர், ஏனெனில் கடற்படுகை அந்த மாநிலங்களுக்குச் சொந்தமானவை என்றார். அந்தச் சட்டத்தின் கீழ் அதன் கட்டுப்பாட்டை அவை கூட்டரசு அரசாங்கத்திடம் இழந்து விடும்.
“அந்தச் சட்டம் மாநிலங்களின் சுயாட்சி உரிமையையும் பாதிக்கும். அதனால் அந்த ஐந்து பெட்ரோலிய மாநிலங்களும் கூட்டு சேர்ந்து நிபந்தனைகளையும் நடைமுறைகளையும் விவாதிக்க வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சபா, சரவாக், திரங்கானு, கிளந்தான் ஆகியவற்றுக்குத் தாம் கடிதம் எழுதியிருப்பதாகவும் அடுத்த மாதம் சரவாக் முதலமைச்சரைச் சந்திக்க ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் ஹுசாம் தெரிவித்தார்.