பேங்க் இஸ்லாம் அதன் பொருளாதார நிபுணருக்கு எதிராக போலீசில் புகார்

1bankபேங்க் இஸ்லாம் இடைநீக்கம் செய்யப்பட்ட அதன் பொருளாதார நிபுணர் அஸ்ருல் அஸ்வார் அஹ்மட் தாஜுடின் அந்த வங்கியின் இரகசிய ஆவணங்களை வெளியில் கசிய விட்டார் என போலீசில் புகார் செய்துள்ளது.

அவருக்கு எதிராக இரண்டு புகார்கள் செய்யப்பட்டுள்ளன. முதலாவது புகாரை வங்கியின் ,மனிதவளத் துறை தலைவர் ஜமிலா அப்துல் சலாம் கடந்த வெள்ளிக்கிழமை டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் செய்தார்.

1bank1இன்று இரண்டாவது புகார் செய்யப்பட்டதாக அவ்வங்கியின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

புகார்கள் செய்யப்பட்டுள்ளதை டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஜைனுடின் அஹ்மட் உறுதிப்படுத்தினார்.

முதல் புகார் பல வலைப்பதிவுகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்புகாரில், அஸ்ருல் நிறுவனக் கொள்கைகளைமீறிச் செயல்பட்டிருப்பதை வங்கி கண்டுபிடித்ததாகக் கூறும் ஜமிலா அதன்வழி அவர் கிறிமினல் குற்றம் புரிந்திருக்கலாம் என்றும் கருதப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

“அஸ்ருல் இரகசிய ஆவணங்களை- பேங்க் இஸ்லாம் இயக்குனர்கள் வாரியத்தின் கூட்டக் குறிப்புகளை- எடுத்துச் சென்றதை வங்கி கண்டுபிடித்தது. அவற்றில் முக்கியமான தகவல்கள் அடங்கியுள்ளன.

“அவற்றைப் பெறும் அதிகாரம் அஸ்ருலுக்கு இல்லை.அத்துடன் அவர் அங்கீகாரமோ அனுமதியோ இன்றி அவற்றை சம்பந்தமில்லாத மூன்றாம் தரப்பு ஒன்றிடமும் கொடுத்திருக்கிறார்.

“அந்த ஆவணங்கள் 2012 ஜூன் 12-இல், மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளன. அந்த மின்னஞ்சல் ‘மிக இரகசியமானது’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது”, என்று ஜமிலாவின் புகார் கூறுகிறது.

போலீஸ் புகார் பற்றி அஸ்ருலுக்குத் தெரியாது

1bank asஇதன் தொடர்பில் இன்று ஜமிலாவைத் தொடர்புகொண்டபோது அவர் பேச மறுத்து விட்டார். அஸ்ருல் போலீஸ் புகார் பற்றித் தெரியாது அதனால் “கருத்துரைப்பதற்கு இல்லை” என்றார்.

பிகேஆர் உறுப்பினரான அஸ்ருல் (இடம்), அண்மையில் சிங்கப்பூரில் ஒரு கருத்தரங்கில் ஆய்வுரை தாக்கல் செய்தபோது அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் தோற்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக ஆருடம் கூறப்போக பதவியிலிருந்து தூக்கப்பட்டார்.

தம் இடைநீக்கம் அரசியல் நோக்கம் கொண்டதென அவர் நம்புகிறார். ஆனால், பேங்க் இஸ்லாம் அதை மறுத்துள்ளது. அஸ்ருல் நிறுவனக் கொள்கைகளை மீறியிருக்கிறார் எனத் தெரிய வந்திருப்பதாக அது கூறிற்று.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அஸ்ருல் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கும் சிங்கப்பூரில் வட்டார பொருளாதார மாநாட்டில் அவர் படைத்த “ஆய்வறிக்கைக்கும் முற்றிலும் தொடர்பில்லை” என்பதை பேங்க் இஸ்லாம் வலியுறுத்தி இருந்தது.

“வங்கியின் உள்கொள்கைகளை மீறினார் என்பதற்காக அவர்  இடைநீக்கம்  செய்யப்பட்டார். அதன் விவரம் 2013 ஜனவரி 17-இல் அஸ்ருலுக்கு காரணம் கேட்டு அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது”, என்றும்  அது கூறிற்று.