மசீச தலைவர் சுவா சொய் லெக், ‘அல்லாஹ்’ விவகாரம் பெரிதாக உருவெடுத்தற்குக் காரணமே டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-தான் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
லிம்மின் அறிக்கையைத் தொடர்ந்துதான் இப்ராகிம் அலி ‘அல்லாஹ்’ சொல்லைக் கொண்ட மலாய்மொழி பைபிளை எரிக்கப்போவதாக மிரட்டினார்.
“சர்ச்சை பதற்ற நிலையை அடைந்தபோது (அது மேலும் பற்றி எரிய) ஒரு ‘தீக்குச்சி’ போல இருந்திருக்கிறார் லிம் குவான் எங். இப்படிச் செய்வதால் வெற்றிபெற முடியும் என்று நினைக்கிறார்”, என சுவா குறிப்பிட்டார். அவர், நேற்று கட்சியின் தலைவர் மன்றக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசினார்.
நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலேயே முடிவு காணப்பட்ட ‘அல்லாஹ்’ விவகாரத்தை வைத்து மாற்றரசுக்கட்சி அரசியல் பண்ணுகிறது என்றாரவர்.
‘மாற்றரசுக் கட்சி எல்லாவற்றையுமே அரசியலாக்குகிறது’
“எல்லாவற்றையுமே அரசியலாக்கும் மாற்றரசுக் கட்சி ‘அல்லாஹ்’ விவகாரத்தையும் அரசியலாக்கிவிட்டது அவப்பேறான விசயமாகும்.
“அது என்றும் ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. இப்போது மட்டும் அது ஒரு பிரச்னையாக மாறியது எப்படி? இந்தச் சர்ச்சையை மேலும் இழுத்துக்கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. சுதந்திரம் பெற்றபோதே முடிவுகாணப்பட்ட ஒரு விவகாரம் இது”, என்றாரவர்.
என்றாலும், இப்ராகிம் அலி, முஸ்லிம்கள் பைபிளை எரிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கக்கூடாது என்பதையும் சுவா வலியுறுத்தினார். மலேசியர்கள் ஒருவர் மற்றவர் சமயத்தை மதிக்க வேண்டும் என்றவர் விருப்பம் தெரிவித்தார்.
“எல்லாருமே ஒருவர் மற்றவரை மதிக்க வேண்டும். பைபிளை எரிப்போம் என்று மிரட்டுவதெல்லாம் தேவையற்றது.
“சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே ஒருவரை மற்றவர் மதிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்திருக்கிறோம். அந்த வகையில் மலேசியர்களின் சகிப்புத்தன்மை மிகவும் போற்றத்தக்கது”, என்றார் சுவா.
கடந்த ஆண்டு தம் கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் பினாங்கு முதலமைச்சருமான லிம், மலாய்மொழி பைபிளில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்த அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியது.
அதனால் வெகுண்ட பெர்காசா தலைவர் இப்ராகிம் ‘மலாய்மொழி பைபிளை எரிப்பேன்’ என்று முழங்கினார்.
பிறகு அவரே, கிறிஸ்துவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதற்காக அவ்வாறு சொல்லவில்லை; அரசமைப்பை மீற நினைப்போர்மீது ஆத்திரம் கொண்டதால் அவ்வாறு பேசிவிட்டதாகக் கூறினார்.
இப்ராகிம் அலிமீது தேசநிந்தனைச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டலாமா என்று வினவியதற்கு சுவா நேரடியாக பதில் சொல்லவில்லை, ஆனால், ஒவ்வொரு நாளும் தாம் உள்பட [பலரும் எளிதில் உணர்ச்சி வசப்பட வைக்கும் விவகாரங்கள் பற்றிப் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம் என்றார்.
எனவே, குற்றம் சாட்டுவதாக இருந்தால் நாட்டில் உள்ள பலரின்மீது குற்றம் சாட்ட வேண்டி இருக்கும் என்றார்.
அதை மேலும் விளக்க வேண்டும் என்று கேட்டதற்கு, சுவா மலேசியாகினிமீது பாய்ந்தார். அது தம் வாயைக் கிண்டி கிளறி தம்மைச் சிக்கலில் மாட்டிவைக்க முயல்வதாகக் கூறினார்.
“எனக்கு சிக்கல் உண்டுபண்ணப் பார்க்கிறீர்களா? அந்தக் கேள்விக்கு நான் ஆமாம். இல்லை என்றுதான் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
“அப்படி நினைப்பது சின்னத்தனம். ‘ஆமாம்’ ‘இல்லை’ என்று சொல்ல முடியாத விவகாரங்களும் உண்டு”, என்று சுவா குறிப்பிட்டார்.