பினாங்கு ஜெலுத்தோங்கில் பள்ளிகூடம் ஒன்றுக்கு வெளியில் முஸ்லிம் பிள்ளைகளுக்கு பைபிள் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது மீதான தங்கள் விசாரனையில் 17 தனி நபர்களிடமிருந்து வாக்குமூலத்தைப் போலீசார் பதிவு செய்துள்ளனர்.
“புலனாய்வுப் பத்திரங்கள் நேற்று மாநில அரசுத் தரப்பு வழக்குரைஞரிடம் சமர்பிக்கப்பட்டன. அந்த புலனாய்வை முடிப்பதற்கு மேலும் உத்தரவுகள் போலீசாருக்கு வழங்கப்படுள்ளன,” என்று பினாங்கு போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹிம் ஹானாபி கூறினார்.
அடையாளம் தெரியாத நபர்கள் அந்த பைபிள்களை பகிரங்கமாக மலாய் மாணவர்களுக்கு விநியோகம் செய்துள்ளதாக அப்துல் ரஹிம் சொன்னார்.
“நாட்டின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கக் கூடிய விரும்பதகாத சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு போலீசார் அந்த விஷயத்தை உடனடியாக விசாரிக்க வேண்டும் என அந்தப் போலீஸ் புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டது,” என்றார் அவர்.
ஜனவரி மாதம் 17ம் தேதி பிற்பகல் மணி 1.30 வாக்கில் தாம் அலுவலகத்தில் இருந்த போது லோரோங் ஸ்கோலாவில் உள்ள SMK Jelutong இடைநிலைப் பள்ளியில் பைபிள்கள் விநியோகம் செய்யப்படுவதாக தமக்கு மலாய் ஆடவர் ஒருவர் தெரிவித்ததாக அந்தப் புகாரைச் செய்த தனிநபர் சொன்னதாக அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
“பின்னர் புகார்தாரர் அந்த இடத்துக்குச் சென்றார். அந்தச் சம்பவம் உண்மை என்பதை அவர் கண்டு கொண்டார். கிடைத்த தகவல்களின் படி காரில் வந்த மூன்று சீன ஆடவர்களும் ஒரு பெண்ணும் காலை நேரப் பள்ளிக் கூடம் முடிந்த பின்னர் மாணவர்களுக்கு பைபிள்களை விநியோகம் செய்தனர்,” என அவர் மேலும் சொன்னார்.
மாணவர்களில் ஒருவர் பைபிள் ஒன்றை புகார்தாரரிடம் கொடுத்தார். அவர் பின்னர் ஜெலுத்தோங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
“இணக்கத்தையும் ஒற்றுமையையும் நாசப்படுத்தி அதிருப்தியையும் தப்பெண்ணத்தையும் ஏற்படுத்தியதற்காக” குற்றம் சாட்டப்படுவது சம்பந்தப்பட்ட குற்றவியல் சட்டத்தின் 298ஏ பிரிவின் கீழ் அந்தச் சம்பவம் விசாரிக்கப்படுவதாகவும் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.