‘பைபிள் எரிப்பு’ துண்டுப் பிரசுரம் மீதான புலனாய்வை பினாங்கு பெர்க்காசா ஆதரிக்கிறது

alkitabபட்டர்வொர்த்தில் ‘பைபிள் எரிப்பு நிகழ்வு’ நிகழும் எனக் கூறிக் கொள்ளும் துண்டுப் பிரசுரம் ‘நிலைமையை சாதகமாக்கிக் கொள்ள முயலும் பொறுப்பற்ற தரப்புக்களின்’ வேலை என பினாங்கு பெர்க்காசா தலைவர் யூசோப் முகமட் யாத்திம் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“பெர்க்காசா சட்டத்தை மதிக்கிறது. நாங்கள் இந்த நாட்டின் அமைதிக்கு எப்போதும் போராடி வந்துள்ளோம். அந்தத் துண்டுப் பிரசுரத்திற்கு பின்னணியில் உள்ளவர்களை விசாரிக்குமாறு நாங்கள் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம்,” என அவர் சொன்னதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமையன்று தேவான் அகமட் படாவி மண்டபத்துக்கு வெளியில் நிகழும் எனக் கூறப்பட்ட அந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களை அழைக்கும் கையெழுத்து இல்லாத அந்தத் துண்டுப் பிரசுரம் நேற்று விநியோகம் செய்யப்பட்டது.

மலாய் மொழி பைபிள்களில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லும் சமயம் சம்பந்தப்பட்ட மற்ற அரபுச் சொற்களும் காணப்படுவதால் அவற்றுக்கு எரியூட்டுமாறு பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி ஜனவரி 19ம் தேதி முஸ்லிம்களைக் கேட்டுக் கொண்டார்.

முஸ்லிம்களுக்கு பைபிள்கள் விநியோகம் செய்யப்படுவதை தடுக்கும் நோக்கத்தை மட்டுமே அந்த அறைகூவல் கொண்டுள்ளதாக யூசோப் மேலும் தெரிவித்தார்.

“மலாய் மொழி பைபிள்களை விநியோகம் செய்கின்றவர்களை ஆத்திரமடைந்துள்ள முஸ்லிம்கள் தீங்கு செய்யாமல் தடுக்கும் நோக்கத்தையும் இப்ராஹிம் வேண்டுகோள் கொண்டுள்ளதாகவும் நான் அறிகிறேன்,” என அவர் சொன்னதாகவும் அம்னோவுக்குச் சொந்தமான அந்த ஏடு குறிப்பிட்டது.

இதற்கிடையில் ஜாவி எழுத்துக்களில் எழுதப்பட்ட மலாய் மொழி பைபிள்களையும் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை பயன்படுத்தும் மலாய் மொழி பைபிள்களையும் எரிக்குமாறு தாம் முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுத்தது, கிறிஸ்துவர்களைப் புண்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதல்ல என இப்ராஹிம் கூறியுள்ளார்.

மாறாக அது கூட்டரசு அரசமைப்பை மீறுவதற்கு முயற்சி செய்கின்றவர்களுக்கு கொடுக்கப்படும் பதிலாகும் என அவர் சொன்னார்.