சபா கள்ளக் குடியேற்றக்காரர்கள் மீதான ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையத்தில் அழைக்கப்பட்டால் சாட்சியமளிக்கத் தாம் தயாராக இருப்பதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
அந்நியர்கள் தொடர்ந்து குடிமக்களாக தொடர்ந்து பதிவு செய்யப்படுவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அனுமதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சபாவில் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டதாக கூறப்படும் விஷயத்தில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை என 1998ம் ஆண்டு துணைப் பிரதமர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அன்வார் சொன்னார்.
அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ‘பெரும்பாலும் தலைமை தாங்கிய’ தேசியப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் தாம் கலந்து கொண்டது இல்லை என்றார் அவர். அதில் நீண்ட காலம் உள்துறை அமைச்சராக இருந்த மெகாட் ஜுனிட் ( காலமாகி விட்டார் ) துணைத் தலைவராக பங்கு கொண்டார்.
“குடியுரிமை வழங்கப்படுவது மீதான கூட்டங்களில் அல்லது விளக்கக் கூட்டங்களில் நான் இருந்தேனா இல்லையா என்பதை உறுதி செய்ய நீங்கள் பதிவேடுகளைப் பார்க்கலாம். சம்பந்தப்பட்டுள்ளதாகக் கருதப்படும் அமைச்சுக்களின் தலைமைச் செயலாளர்களை நீங்கள் கேட்கலாம்,” என அன்வார் இன்று சொன்னார்.
“நான் அத்தகைய கூட்டங்களில் அந்த விவாதங்கள் நிகழ்ந்த வேளையில் ஒரு போதும் பங்கு கொண்டதே இல்லை. நான் இடைக்காலப் பிரதமராக இருந்த போது கூட நான் அந்த விஷயங்களில் சம்பந்தப்பட்டது இல்லை.”
“அந்த நேரத்தில் பிரதமர் (மகாதீர்) ஆதரவுடன் காலஞ்சென்ற மெகாட் ஜுனிட்-டும் அப்துல் அஜிஸ் சம்சுதீனும் சம்பந்தப்பட்டதால் அது (அந்நியர்களுக்குக் குடியுரிமை) நிகழ்ந்தது.”
ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆர்சிஐ இது வரை தம்மைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அன்வார் தெரிவித்தார்.
(வழக்கமாக சாட்சிகள் அந்த ஆணையத்திடன் சாட்சியமளிப்பதற்கு முன்னர், அவர்களுடைய வாக்குமூலம் பதிவு செய்யப்படும்)
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி சொல்வது போல ஆர்சிஐ விசாரணைகள் அவருக்கு எதிராக திருப்பப்படக் கூடிய சாத்தியத்தை எதிர்கொள்ள அவர் தயாராக இருக்கிறாரா என்றும் அன்வாரிடம் வினவப்பட்டது.
“நான் அது குறித்து இனிமேலும் கவலைப்படப் போவதில்லை,” எனப் பதில் அளித்த அவர், தாம் இதை விட மோசமாக தேசத் துரோகி என்றும் அந்நியர்களின் ஏஜண்ட் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக சொன்னார்.
மகாதீருக்கு ‘வரலாறு தெரியவில்லை’
ஒரு மில்லியன் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுவதற்காக துங்கு அப்துல் ரஹ்மானுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த முயலும் மகாதீர் வரலாற்றை அறியாதவர் (kurang waras) என்றும் அன்வார் குறை கூறினார்.
துங்குவின் தவறுகள் எனக் கூறப்படுகின்ற விஷயங்களை மறு ஆய்வு செய்ய ஒர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கூட மகாதீர் யோசனை தெரிவித்திருந்தார்.
இந்த நாட்டில் ஏற்கனவே இருந்த சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் சீக்கியர்களுக்கும் குடியுரிமை வழங்கிய ரெய்ட் ஆணையத்தைப் பற்றி மகாதீர் மறந்து விட்டதாக தெரிகிறது என்று அன்வார் சொன்னார்.
ஒப்புக் கொள்ளப்பட்ட படி 1950க்கு முன்னதாக வசித்துள்ள காலத்தின் ( jus soli of citizenship )அடிப்படையில் குடியுரிமை கொடுக்கப்பட்டதை நாம் தற்காத்தோம். அதன் விளைவாக மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாகினர். சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் சீக்கியர்களுக்கு சம உரிமைகள் கொடுக்கப்பட்டன,” என்றார் அவர்.
“பின்னர் நிகழ்ந்த ஏமாற்று வேலையைத் தான் நாங்கள் கண்டிக்கிறோம். அது நேரடியாக மகாதீர் மீது பழி போடுகிறது. காரணம் இது வரை சமர்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் அதனையே சுட்டிக் காட்டுகின்றன. மகாதீர் பதவி விலகிய பின்னரும் அத்தகைய விஷயங்கள் தொடருவதால் நஜிப்பும் பதில் சொல்ல வேண்டும்.”