சிலாங்கூர் சபாஷ் மூலதனச் செலவுகளை முடக்கி வைத்துள்ளது

khalidநீர் வளச் சலுகைகளைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவனம் தனது விரயமான செலவுகள் மூலம் பொது மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துவதைத் தடுக்க அதன் மூலதன செலவுகளை சிலாங்கூர் மாநில அரசாங்கம் முடக்கி வைத்துள்ளது.

அந்தத் தகவலை சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் வெளியிட்டுள்ளார்.

“ஏனெனில் சபாஷ் செலவு செய்யும் ஒவ்வொரு சென் -னும் மக்கள் செலுத்தும் மாதாந்திரக் கட்டணத்தில்  தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்றார் அவர்.

“ஆகவே பயனீட்டாளர்கள் நலன்களையும் பணத்துக்கு தக்க மதிப்பு கிடைப்பதையும் சிலாங்கூர் அரசாங்கம் பாதுகாத்து உறுதி செய்ய வேண்டும். வீணான செலவுகளினால் கட்டணம் அதிகரித்து அவர்களுக்கு சுமை ஏற்படக் கூடாது.”

2006ம் ஆண்டுக்கான நீர் வளச் சேவைச் சட்டத்திற்கு ஏற்ப மறு சீரமைப்புச் செய்யப்பட்டால் மட்டுமே சிலாங்கூர் தண்ணீர் பிரச்னைகள் தீரும் என அவர் வலியுறுத்தினார்.

அவ்வாறு செய்வதற்குக் கூட்டரசு அரசாங்க ஒப்புதலுக்குத் தாம் இன்னும் காத்திருப்பதாக காலித் மேலும் சொன்னார்.

திறந்த டெண்டர் இல்லாமல் திட்டங்கள் கொடுக்கப்பட்டன

2008ம் ஆண்டு மே மாதம் தொடக்கம் அவசரமான பணிகளுக்குத் தவிர சபாஷ் நிறுவனத்தின் மூலதனச் செலவுகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

வருமானம் இல்லாத நீர் விநியோகம் அதிகமாக இருப்பதற்கும் இறைகுழாய்கள் அதிகப் பளுவைத் தாங்க வேண்டியிருப்பதற்கும் மற்ற பிரச்னைகளுக்கும் அந்த முடக்கமே காரணம் என சபாஷ்-ஷும் பிஎன் -னும் கூறுகின்றன.khalid1

“விரயமான செலவுகள்” என்ன என்பதை காலித் குறிப்பிட்டு காட்டவில்லை என்றாலும் நேரடிப் பேச்சுக்கள் மூலம் குத்தகைகளை வழங்கும் சபாஷ் நடைமுறைகளே விரயத்த்திற்குக் காரணம் என அவர் சொன்னதாக மாநில அரசுக்குச் சொந்தமான சிலாங்கூர் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“மாநிலத்தில் நடைமுறைகள் உள்ளன. பேச்சுக்கள் வழி அல்லாமல் திறந்த டெண்டர் வழியாக அந்தத் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும்,” என அவர் கூறினார்.