மஇகா: நாடற்ற இந்தியர் பிரச்னையை சிறப்புக் குழு தீர்க்க முடியும்

indiansஇந்திய சமூகம் எதிர்ந்நோக்கும் குடியுரிமை, சிவப்பு அடையாளக் கார்டுகள், பிறப்புச் சான்றிதழ்கள், அடையாள ஆவணங்கள் போன்ற பிரச்னைகளை சிறப்புக் குழு ஒன்றை அமைப்பதின் மூலம் தீர்க்க முடியும் என மஇகா இளைஞர் பிரிவு யோசனை தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சின் கீழ் அந்தக் குழு அமைக்கப்படலாம் என்றும் அதில் அரசு அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், அரசு சாரா அமைப்புக்கள், விஷயம் தெரிந்த தனிநபர்கள் ஆகியோர் இடம் பெறலாம் என்றும் அது கூறியது.

இந்திய சமூகம் எதிர்நோக்கும் ஆவணங்கள் பிரச்னையை சமாளிப்பதற்கு அந்த நடவடிக்கை நிச்சயம் உதவும் என அதன் செயலாளர் சி சிவராஜ் சொன்னார்.

“அந்தப் பிரச்னைகளை 20,000 இந்தியர்கள் இன்னும் எதிர்நோக்குவதாக நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். அதில் 5,000 பேர் சிவப்பு அடையாளக் கார்டுகளை வைத்துள்ளனர். மற்றவர்களிடம் பிறப்புச் சான்றிதழ் அல்லது அடையாளக் கார்டுகள் இல்லை.”

“ஆகவே ஒரு குழுவை அமைப்பதின் மூலம் நாங்கள் ஒரு குழுவாக இயங்கி சிறந்த தீர்வுகளைக் காண முடியும். அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இணைந்து செயல்பட மஇகா இளைஞர் பிரிவு தயாராக உள்ளது,” என புத்ராஜெயாவில் நேற்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனிடம் மகஜர் ஒன்றைக் கொடுக்கும் முன்னர் சிவராஜ் நிருபர்களிடம் கூறினார்.

பெர்னாமா