‘மசீச பணக்காரர்களின் பேச்சாளர்’, எம்டியுசி சாடல்

1mtucகுறைந்த பட்ச சம்பளத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராக மசீச தலைவர் சுவா சொய் லெக், மனிதவள அமைச்சர் எஸ்.சுப்ரமணியத்துக்கு இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தாலும் அரசாங்கம் அதில் பின்வாங்கக் கூடாது என்று மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி)  வலியுறுத்தியுள்ளது.

1mtuc1மசீச-வைப் “பணக்காரர்களின் பேச்சாளர்” என்று வருணித்த எம்டியுசி தலைமைச் செயலாளர் அப்துல் ஹாலிம் மன்சூர் (வலம்), தொழிலதிபர்களின் கோரிக்கைகளை எடுத்தொலிப்பதைத் தவிர அக்கட்சிக்கு வேறு எதுவும் தெரியாது என்றார்.

“மாதம் ரிம500 என்று குறைந்த சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு நாளெல்லாம் உழைக்கும் தொழிலாளர்களின் தேவைகள் பற்றி சுவா கவலைப்படவில்லை”, என அப்துல் ஹாலிம் நேற்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தை அமல்படுத்துவதால் எழக்கூடிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும், அதையும் சீனப் புத்தாண்டுக்குமுன் காண வேண்டும் என்று சுவாசெவ்வாய்க்கிழமை சுப்ரமணியத்துக்கு இறுதி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

சுப்ரமணியம் அதைச் செய்யத் தவறினால், மசீச ஆதரவுடன் சிறிய-நடுத்தர தொழில்கள் (எஸ்எம்இ) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றாரவர்.

குறைந்தபட்ச சம்பள விவகாரத்தில் அரசாங்கம் மசீச-வின் பரிந்துரையை ஏற்க வேண்டும் என்று சுவா விரும்புகிறார். மசீச-வின் பரிந்துரையின்படி லெவி, தங்கும் இடம், உணவு ஆகியவற்றுக்கான செலவுகளை அந்நிய தொழிலாளர்களே ஏற்க வேண்டும். எஸ்எம்இ-கள் அவற்றை அவற்றை ஏற்றால் நொடித்துப்போகும்.

ஆனால், எம்டியுசி குறைந்தபட்ச சம்பளத் திட்டம் பற்றி மூன்றாண்டுகளாக தீவிரமாக விவாதிக்கப்பட்டு அதன்பின்னரே அதை நடைமுறைப்படுத்தும் முடிவு செய்யப்பட்டது என்பதை அழுத்தமாக வலியுறுத்தியது.

“தேசிய சம்பள அலோசனை மன்றச் சட்டம் 2011-இல் நிறைவேற்றப்பட்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டது, 2012 ஏப்ரலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்த கொள்கையின் அடிப்படையில் 2012 ஜூலை 16-இல் குறைந்தபட்ச சம்பள ஆணையும் அரசிதழில் வெளியிடப்பட்டது”, என்று அப்துல் ஹாலிம் கூறினார்.

1mtuc2“சுவா (இடம்), இப்படிப்பட்ட முக்கியமான நிகழ்வுகளை எல்லாம் மறந்தவராய், இப்போதுதான் நீண்ட துயில்நீங்கி எழுந்தவராய், அரசாங்கத்தைக் குறைந்தபட்ச சம்பளத் திட்டத்திலிருந்து பின்வாங்கச் சொல்வது குழப்பத்தைத் தருகிறது.

“எம்டியுசி, குறைந்தபட்ச சம்பளத்தில் உறுதியாக உள்ளது. நஜிப் அறிவித்த அக்கொள்கையிலிருந்து அரசாங்கம் பின்வாங்கக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது”, என்றாரவர்.

குறைந்தபட்ச சம்பள ஆணை, மசீச பிரதிநிதிகளையும் கொண்ட அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது என்பதால் சுவா எஸ்எம்இ-களுடன் சேர்ந்து சுப்ரமணியத்துக்கு எதிராக ஆர்ப்பட்டத்தில் ஈடுபடுவதற்குமுன் பிரதமரைச் சந்தித்துப் பேசுவது நல்லது என்று அப்துல் ஹாலிம் கூறினார்.