பைபிள் எரிப்பு மருட்டல் மீது அமைதியாக இருங்கள் என கோ வேண்டுகோள்

alkitab‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்னை, மலாய் மொழி பைபிள்களை எரிக்கப் போவதாக விடுக்கப்பட்டுள்ள மருட்டல்கள் மீது மலேசியர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக பரபரப்பு அடையக் கூடாது.

இவ்வாறு பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் கோ சூ கூன் கூறுகிறார். நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அந்த விஷயம் விவாதிக்கப்பட்டது என்றும் மலேசியர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்பதே அமைச்சர்களின் கருத்து என்றும் அவர் சொன்னார்.

“இதனிடையே ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது மீதான வாக்குவாதங்களைத் தொடங்குவதை எல்லாத் தரப்புக்களும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது தொடர்பான வழக்கு இன்னும் முறையீட்டு நீதிமன்றத்தில் தேங்கியுள்ளது,” என அவர் கோலாலம்பூரில் விடுத்த அறிக்கை தெரிவித்தது.

மலாய் மொழி பைபிளுக்கு எரியூட்ட வேண்டும் என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி விடுத்துள்ள அறைகூவல் குறித்து கருத்துரைத்த போது கோ அவ்வாறு கூறினார்.

தாம் சொன்னதற்கான அர்த்தத்தை விளக்குவதற்கு இப்ராஹிம் முயற்சி செய்த போதிலும் அவர் எல்லை மீறி விட்டார் என்றும் கிறிஸ்துவ சமூகத்தின் உணர்வுகளை காயப்படுத்தி விட்டார் என்றும் மக்கள் கருதுவதாக கெரக்கான் தலைவருமான  கோ சொன்னார்.alkitab1

“இப்ராஹிம் மலாய் தேசியவாதம், உரிமைகள் ஆகியவற்றுக்கான போராட்ட வீரராக இருக்கலாம் ஆனால்  நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நமது பல இன சமூகத்தைக் கருத்தில் கொள்ள வேண்டிய  பொறுப்பு  அவருக்கு உள்ளது. நாட்டின் அமைதி, நிலைத்தன்மை ஆகியவற்றுக்காக அவர் அத்தகைய கருத்துக்கள்  வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.’

“முஸ்லிம் அல்லாதார் முஸ்லிம்களை மதம் மாற்றுவதாக கூறப்படுவதை சமாளிப்பதே இப்ராஹிமின் நோக்கம்  என்றால் பைபிள்கள் கொடுக்கப்பட்ட முஸ்லிம்கள் அவற்றை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுரை கூறியிருக்க வேண்டும். அதற்கு ஒரு தீர்வாக எரியூட்டுமாறு யோசனை சொல்லக் கூடாது,” என்றார் அவர்.

பெர்னாமா