வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால் புறக்கணிப்பு இயக்கத்தில் அம்னோ மையங்கள்

1boycottபொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்றிருக்கும் வேளையில், சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய ஜொகூர், பாசிர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஒன்பது குடிசைப் பகுதிகளைச் சேர்ந்த அம்னோ நடவடிக்கை மையங்கள் மூடிக்கிடக்கின்றன. மந்திரி புசார்,, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பதால் அதைக் கண்டித்து வகையில் அவை மூடப்பட்டுள்ளன.

1boycott1குடிசைவாசிகளுக்கு வாக்குறுதி அளித்தபடி நிலப் பட்டா வழங்கப்படவில்லை என்பதால் மந்திரி புசார் அப்துல் கனி ஒத்மான்(இடம்) மீது வெறுப்படைந்துள்ள தம் ஆள்கள் தேர்தல் முன்னேற்பாட்டு வேலைகள் எதிலும் ஈடுபட மாட்டார்கள் என்று பாசிர் கூடாங் அம்னோ தொகுதி நிரந்தர தலைவர் அபு பக்கார் அலிபி மலாய்மொழி நாளேடான சினார் ஹராபானிடம் கூறினார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் பொதுத் தேர்தலில் பிஎன் வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பைப் பாதிக்கும் நடவடிக்கைகளில் வாக்காளர்கள் ஈடுபடலாம் என்ற அவர், அப்படி எதுவும் நடந்தால் அதற்குத் தாங்கள் பொறுப்பற்ற என்றார்.

“இப்போது ஐந்து நடவடிக்கை மையங்கள் மூடிக்கிடக்கின்றன. மேலும் நான்கு மையங்களும் தேர்தல் வேலைகளில் ஈடுபடாமல் மூடப்படும் நிலையில் உள்ளன”, என்றாரவர்.

சுமார் 400 குடியிருப்பாளர்கள் நிலஉரிமை பெறுவதற்காக 1999-இலிருந்து போராடிக்கொண்டிருப்பதாக கம்போங் சினிபோங் அம்னோ கிளைத் தலைவர் யாக்கூப் ஷஹாடான் கூறினார்.

“குடிசைவாசிகளாக இருப்போரில் பெரும்பாலோர் மலாய்க்காரர்கள். அதனால், 13வது பொதுத் தேர்தலில் மலாய் வாக்குகள் பாதிக்கப்படலாம்.

“அரசாங்கத்தின் மேம்பாட்டுத் திட்டத்தை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், ஆதியிலிருந்து அங்கு குடியிருந்து அந்நிலத்தை மேம்படுத்த வியர்வை சிந்தி உழைத்தவர்களை  ஓரங்கட்டாதீர்கள்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.

அப்துல் கனி குடியிருப்பாளர்களுக்கு நிலப் பட்டா வழங்குவதாக ஏற்கனவே வாக்குறுதி அளித்திருக்கிறார் என்று கம்போங் பிளந்தோங் பாரு அம்னோ கிளைத் தலைவர் முகம்மட் சாலே அர்ஷாட் கூறினார்.

“இது மந்திரி புசார் முன்பே உறுதி கூறிய ஒன்றுதான். மந்திரி புசார் அப்படி வாக்குறுதி அளிக்கவில்லை என்றால் நாங்கள் ஏன் கேட்கப் போகிறோம்.

“மந்திரி புசார் என்ன சொல்லப் போகிறார் என்பதற்காகக் காத்திருப்போம். இனியும் அவர் நழுவிக் கொண்டிருந்தால் விரைவில் பிரதமரைச் சந்திப்போம்”, என்றாரவர்.

குடியிருப்பாளர்களின் மகிழ்ச்சி ஏமாற்றமாக மாறியது

கம்போங் ஸ்ரீ மக்மோர் அம்னோ கிளைத் தலைவர் நோர்டின் கஸ்ரி,49, தம் கம்பத்தில் உள்ளவர்களுக்கு நிலப் பட்டா கொடுக்கப்படும் என்று அப்துல் கனி உறுதி கூறியிருந்தார் ஆனால், தற்காலிக குடியிருப்பு உரிமம்(டிஓஎல்)தான் வழங்கப்பட்டது என்றார்.

பத்தாண்டுகளுக்கு மேலாகக் காத்திருந்தவர்களுக்கு அது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. ஏனென்றால், அது தற்காலிகமாக அங்கு தங்கி இருப்பதற்கான அனுமதிதான், எந்த நேரத்திலும் அரசாங்கத்தால் மீட்டுக்கொள்ளப்படலாம் என்றாரவர்.

“இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். இல்லையேல் மூடப்பட்ட மையங்கள் மூடப்பட்டே இருக்கும்”, என்றவர் சொன்னார்.

பாசிர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதி, பல இனங்கள் கலந்து வாழும் ஓரிடமாகும். அங்கு மலாய்க்கார வாக்காளர் எண்ணிக்கை 50விழுக்காட்டுக்கு சற்றுக் குறைவு. இப்போது அத்தொகுதி எம்பியாக இருப்பவர் உயர்கல்வி அமைச்சர் முகம்மட் காலிட் நோர்டின். 2008 பொதுத் தேர்தலில் அவர் 17,281 வாக்குகள் பெரும்பான்மையில் பிகேஆரின் முகம்மட் ரிசான் முகம்மட் சமனை த் தோற்கடித்தார்.

1boycott2இதனிடையே, அம்னோ தகவல் தலைவர் அஹ்மட் மஸ்லான் (வலம்) தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்படுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

“திரும்பவும் கூறுகிறேன். புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட முனையும் எவருக்கும் அம்னோவில் இடமில்லை. போய், வேறு ஏதாவது என்ஜிஓ-வில் சேர்ந்துகொள்ளுங்கள்”, என்று கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார்.

பாசிர் கூடாங்கில் நடவடிக்கை மையங்கள் மூடப்பட்டதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார். அப்படிப்பட்ட மையங்கள் பிப்ரவரி முதல் தேதிக்குப் பின்னரே திறக்கப்படும் என்றாரவர்..

“அதாவது அவை மூடப்படவில்லை. நாங்கள் தேர்தல் பரப்புரையையே இன்னும் தொடங்கவில்லையே”, என்றவர் சொன்னார்.