பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலியை போலீஸ் அழைத்தது

mailபெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி பைபிளை எரிக்குமாறு விடுத்த அறைகூவல் தொடர்பில் பினாங்கு போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அடுத்த இரண்டு நாட்களில் அவரைப் போலீஸ் மீண்டும் அழைக்கும்.

தமக்கு எதிராக போலீஸில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் தொடர் நடவடிக்கையை எடுப்பதை மலாய் மெயில் பத்திரிக்கைக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.

‘அல்லாஹ்’ என்ற சொல்லை அல்லது இதர அரபு சொற்களைக் கொண்ட பைபிள்களை பறிமுதல் செய்து அவற்றுக்கு எரியூட்டுமாறு இப்ராஹிம் விடுத்த அறிக்கை தொடர்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்துறைத் தலைவரைக் கட்டாயப்படுத்தும் நீதிமன்ற ஆணையை பெறுவதற்கு டிஏபி ‘முயற்சி செய்யலாம்’ என பெர்க்காசா தலைமைச் செயலாளர் சையட் ஹசான் சையட் அலி கூறியுள்ளார்.

இப்ராஹிமுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்துறைத் தலைவருக்கு டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் இரண்டு வார அவகாசம் கொடுத்துள்ளதாக நேற்று மலாய் மெயில் நாளேட்டில் வெளியான செய்தி குறித்து சையட் ஹசான் கருத்துரைத்தார்.

mail1ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் உண்மையான பைபிள் எரிப்பு சம்பவங்களைப் போலீசார் புலனாய்வு செய்ய வேண்டும் என சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறியிருந்தார்.

“அத்தகைய நடவடிக்கைகளை தொடருவது அவர்கள் (டிஏபி) உரிமை. வழக்குரைஞர் என்ற முறையில் கர்பால் பொறுமையாக இருக்க வேண்டும். நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்,” என்றும் சையட் ஹசான் சொன்னார்.

“அத்தகைய விஷயங்கள் பற்றி உண்மையில் கர்பாலுக்கு அக்கறை இருந்தால் முக நூலில் பாட்ரிக் தியோ தெரிவித்துள்ளது போன்ற நாட்டின் ஒற்றுமையைப் பாதிக்கக் கூடிய மற்ற விஷயங்கள் அல்லது மலாய்க்காரர்கள் மீது மற்ற சமயங்கள் வெறுப்புணர்வை பரப்புவது ஆகியவற்றை அவர் ஏன் கவனிக்கக் கூடாது ?”

முஸ்லிம்களை சிறுமைப்படுத்திய தியோவின் முகநூல் பதிவு பற்றியே சையட் ஹசான் அவ்வாறு குறிப்பிட்டார்.

தியோ பின்னர் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

-மலாய் மெயில்