இப்போது பிகேஆர் கட்சியில் இருக்கும் முன்னாள் துணை அமைச்சர் தான் கீ குவோங்கிற்கு எதிராக பெல்டா என்ற கூட்டரசு நில மேம்பாட்டு வாரியம் சமர்பித்த 200 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அந்தக் கட்டுரை அவதூறானது என்பதை தாம் ஒப்புக் கொள்ளும் வேளையில் தான் கூறிய கருத்துக்களை பெல்டா நிரூபிக்கத் தவறி விட்டதாக நீதிபதி ஸாபாரியா முகமட் யூசோப் கூறினார்.
பெல்டா சம்பந்தப்பட்ட அந்த கட்டுரையை எழுதிய நிருபரை அழைப்பதற்குத் தவறி விட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.
“அதனால் அந்த வழக்குச் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்படுகிறது,” என்றார் நீதிபதி.
நீதிபதி ஸாபாரியா, தானுக்கு 70,000 ரிங்கிட் செலவுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். இதற்கு முன்னர் தானுடைய வழக்குரைஞர்கள் ராஸ்லான் ஹாட்ரி சுல்கிப்லியும் ஹோ கோக் இயூவும் 100,000 ரிங்கிட் கோரியிருந்தனர்.
தற்போது பிகேஆர் ஒழுங்கு வாரியத்துக்குத் தலைமை தாங்கும் தான், “உறுதியான தீர்ப்பை” வழங்கியதற்காக நீதிபதிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டார். நீதிக்கும் உண்மைக்கும் போராடுவதைத் தாம் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை என அவர் சூளுரைத்தார்.
தானை திவாலாக்குவதே அந்த அவதூறு வழக்கின் நோக்கம் என ஜோகூர் பிகேஆர் தலைவரும் பிகேஆர் உதவித் தலைவருமான சுவா ஜுய் மெங் கூறினார்.
“அந்த வழக்கு நிராகரிக்கப்பட வேண்டும் என மக்கள் பிரார்த்தனை செய்தனர். நீதிமன்றம் அவ்வாறு தீர்ப்பளித்துள்ளதும் நல்ல விஷயமாகும். சில தரப்புக்களின் தலையீடு அல்லது நெருக்குதல் ஏதுமில்லை. நல்ல நீதிபதிகளும் இருக்கின்றனர் என்பதையும் அந்த வழக்கு காட்டியுள்ளது”, என்றார் அவர்.