போலீசார் பின்தொடர்ந்த பின்னர் மர்மமான முறையில் மாரடைப்பால் மரணமடைந்த 39 வயது சுகுமார் செல்லையாவின் குடும்பத்தினர் உண்மையைக் கண்டறிவதற்கு இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
கூடிய விரைவில் அந்த இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்பட முடியும் என்றும் அந்தக் குடும்பத்தினர் நம்புவதாக அவர்களுடைய வழக்குரைஞர்களில் ஒருவரான லத்தீப்பா கோயா தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.
“நாங்கள் நிச்சயம் இரண்டாவது சவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்வோம். நாங்கள் அதனைச் செய்வதற்குத் தயாராக உள்ள இன்னொரு மருத்துவ மனையையும் நோய்க்கூறு நிபுணரையும் தேடிக் கொண்டிருக்கிறோம். அது எப்போது முடியும் எனத் தெரியவில்லை… பெரும்பாலும் இன்று முடியும்,” என்றார் அவர்.
செர்டாங் மருத்துவமனையில் நடத்தப்பட்ட முதலாவது சவப் பரிசோதனை முடிவை குடும்பத்தினர் நம்பவில்லை. காரணம் போலீஸ் காவலில் இருந்த போது மரணமடைந்த ஏ குகன் விவகாரத்தில் பொய்யான சவப் பரிசோதனை அறிக்கையை கொடுத்த வரலாறு அந்த மருத்துவமனைக்கு உள்ளது என லத்தீப்பா சொன்னார்.
சுகுமார் விஷயத்தில் இருதயத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அவர் மரணமடைந்தார் என செர்டாங் மருத்துவமனை சவப் பரிசோதனை அறிக்கை கூறியுள்ளது.
என்றாலும் பொதுச் சொத்து ஒன்றுக்கு சேதம் விளைவித்ததற்காக நான்கு போலீஸ்காரர்களினால் துரத்தப்பட்ட சுகுமார் பின்னர் கை விலங்கு மாட்டப்பட்டு அவரது முகத்தில் மஞ்சள் பொடி வீசப்பட்டு உலு லங்காட் தாமான் பெகாக்காவில் கும்பல் ஒன்றினால் அடிக்கப்பட்டு மரணமடைந்ததாக நேரில் பார்த்த சாட்சிகள் கூறிக் கொண்டுள்ளனர்.
அடிக்கப்பட்டதை மறுக்கும் சாட்சிகளை போலீசார் காட்டுகின்றனர்
11 சாட்சிகளிடமிருந்து போலீசார் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாக சிலாங்கூர் சிஐடி தலைவர் எஸ்ஏசி முகமட் அட்னான் அப்துல்லா சொன்னதாக அரசாங்க ஆதரவு நாளேடான உத்துசான் மலேசியா இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த சாட்சிகளில் 10 பேர், போலீசார் அடித்ததாக கூறப்படும் சம்பவம் நிகழவே இல்லை என்று கூறியுள்ளதாக அவர் சொன்னார்.
“சந்தேகத்துக்குரியவரால் (சுகுமார்) தலையில் தாக்கப்பட்டவர் மேலும் ஒரு சாட்சி,” என அவர் சொன்னதாகவும் உத்துசான் குறிப்பிட்டது.
அதற்குப் பதில் அளித்த லத்தீப்பா, அடிக்கப்பட்டதைப் பார்த்த மூன்று சாட்சிகள் இருப்பதாகவும் அவர்களுடைய வாக்குமூலத்தைப் போலீசார் இன்னும் பதிவு செய்யவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினார்.
அவர்கள் சுயமாக போலீசாரிடம் முன் வந்து சாட்சியமளிப்பார்களா என லத்தீப்பாவிடம் வினவப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த அவர்,” இது போன்ற நெருக்குதல் இருக்கும் போது அவர்கள் சுயமாக முன் வருவார்களா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. என்றாலும் அவர்களுடைய ஒத்துழைப்பைப் பெற நாங்கள் முயற்சி செய்வோம்”, என்றார்.
முழுமையான விசாரணை நடத்தப்படுவதற்கு முன்பே தங்கள் அதிகாரிகள் நிரபராதிகள் என போலீசார் பிரகடனம் செய்வதாகவும் அவர் குறை கூறினார்.
“அது பாரபட்சமாகத் தெரிகிறது. நாம் அத்தகைய விசாரணையை நம்ப முடியாது. போலீசார் நிரபராதிகள் எனத் திரும்பத் திரும்பச் சொல்வதற்குப் பதில் சுயேச்சைக் குழு ஒன்றை தேசியப் போலீஸ் படைத் தலைவர் தயார் செய்ய வேண்டும் என நாங்கள் கோருகிறோம்”, என லத்தீபா சொன்னார்.
‘புகார் செய்வதை போலீசார் முறியடித்தனர்’
சுகுமார் மரணம் குறித்த போலீஸ் விளக்கத்தை ஏற்க மறுத்த அவர், பாதிக்கப்பட்டவரின் முகத்தில் காணப்பட்ட மஞ்சள் தூள் தடயங்கள் குறித்து போலீசார் இன்னும் விளக்கவில்லை என்றார். போலீஸ்காரர்களில் ஒருவர் அதனை வீசியதாக கூறிக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்த விஷயம் மீது காஜாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நேற்று புகார் செய்ய குடும்பத்தினர் முயன்றதாகவும் ஆனால் அவர்களது முயற்சி தோல்வி அடைந்து விட்டதாகவும் லத்தீப்பா மேலும் சொன்னார்.
“போலீசார் அதனை பிரச்னையாக்கினர். போலீஸ் நிலையத்துக்குள் செல்லும் மக்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த விரும்பினர். ஒசிபிடி-யும் ஒத்துழைக்க விரும்பவில்லை.”
“சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது அதற்கு காரணமாக இருக்கலாம். என்றாலும் குடும்பத்தினர் இன்னொரு இடத்தில் விரைவில் போலீஸ் புகாரைச் சமர்பிப்பார்கள்,” என்றார் லத்தீப்பா