பைபிள் எரிப்பு மீது பெர்க்காசா சொந்தப் புகார்களை நாடு முழுவதும் சமர்பிக்கிறது

aliபைபிள் எரிப்பு மீது பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவருக்கு எதிராக செய்யப்பட்ட போலீஸ் புகாருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பெர்க்காசா உறுப்பினர்கள் நாடு முழுவதும் தங்கள் சொந்தப் புகார்களைச் சமர்பித்துள்ளனர்.

மனித உரிமை வழக்குரைஞரான சித்தி ஸாபேடா காசிம், தங்கள் தலைவருக்கு எதிராக பொய்யான போலீஸ் புகாரை சமர்பித்துள்ளதாகவும் அவர் மீது அவதூறு கூறியுள்ளதாகவும் அவர்கள் அந்தப் புகார்களில் குறிப்பிட்டுள்ளனர்.

“உண்மையில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் மலாய் மொழி பைபிள்களையும் ஜாவி எழுத்துக்களில் உள்ள மலாய் மொழி பைபிள்களையும் எரிக்க வேண்டும் என்று மட்டுமே எங்கள் பெர்க்காசா தலைவர் கூறினார். எல்லா பைபிள்களும் எரிக்கப்பட வேண்டும் என அவர் உத்தரவிடவே இல்லை,” என நெகிரி செம்பிலான் பெர்க்காசா தலைவர் முகமட் நூர் நோர்டின் கூறினார்.

கோலாலம்பூர், கிளந்தான், பினாங்கு, சிலாங்கூர், பேராக் ஆகியவற்றில் பெர்க்காசா உறுப்பினர்கள் சித்தி ஸாபேடாவின் நடவடிக்கையை எதிர்த்து போலீஸில் புகார் செய்துள்ளனர்.ali1

‘அல்லாஹ்’ என்ற சொல்லை பயன்படுத்தும் பைபிள்களை எரிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டதற்காக இப்ராஹிமுக்கு எதிராக ஜனவரி 23ம் தேதி போலீசில் புகார் செய்த குடிமக்கள் குழு ஒன்றுக்கு சித்தி ஸாபேடா தலைமை தாங்கினார்.

அதனைத் தொடர்ந்து டிஏபி தலைவர் கர்பால் சிங், ஜனவரி 22ம் தேதி அதே விஷயம் மீது போலீசில் புகார் செய்தார்.

பைபிள் உண்மையில் எரிக்கப்படும் சம்பவம் நிகழ்ந்தால் தவிர இப்ராஹிம் மீது வழக்குத் தொடர முடியாது என  சட்டத்துறைத் தலைவர் கனி பட்டெய்ல் கூறிய பின்னர் கர்பால் போலீசில் புகார் செய்தார்.

ஜனவரி 24ம் தேதி போலீசார் இப்ராஹிமின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். தமது கருத்துக்களைத் தற்காத்துப் பேசிய அவர், கிறிஸ்துவர்களைக் காயப்படுத்தும் நோக்கத்தை தாம் கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

பைபிளின் மலாய் மொழிபெயர்ப்பில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்துவதை எதிர்க்கும் பல அமைப்புக்களில் பெர்க்காசாவும் ஒன்றாகும். ஆனால் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் முஸ்லிம் அல்லாதாருக்குச் சாதகமாக தீர்ப்பளித்துள்ளது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் முறையீடு செய்து கொண்டுள்ளது. முறையீட்டு நீதிமன்றத்தில் அது இன்னும் தேங்கியுள்ளது.