சிலாங்கூர் அரசாங்கத்தின் அங்கீகாரம் இல்லாமல் லங்காட் 2 என அழைக்கப்படும் லங்காட் 2 நீர் சுத்திகரிப்புத் திட்டத்தைக் கூட்டரசு அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று அறிவித்துள்ளார்.
“அங்கீகரிக்கப்படுகிறதோ இல்லையோ நாங்கள் லங்காட் 2ஐ கட்டுவதற்கான குத்தகைகள் கோரி டெண்டர்களை வெளியிட்டுள்ளோம் எனக் கூட்டரசு அரசாங்கம் சொல்கிறது. இன்னும் ஒரிரு மாதங்களில் மக்கள் நன்மைக்காக நாங்கள் லங்காட் 2 திட்டத்தை தொடருவோம். மந்திரி புசாருக்கோ அல்லது எதிர்க்கட்சிகளுக்கோ அல்ல,” என அவர் சபா பெர்ணாமில் ஒரே மலேசியா மக்கள் நட்புறவு நிகழ்வு ஒன்றைத் தொடக்கி வைத்த போது கூறினார்.
அந்தத் திட்டத்தை அங்கீகரிக்க பக்காத்தான் தலைமையிலான மாநில அரசாங்கம் மறுத்து வருவதால் லங்காட் 2 திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 40.55 விழுக்காடு அல்லது 29 மாதங்கள் தாமதம் அடைந்துள்ளன என அவர் சொன்னார்.
கிள்ளான் பள்ளத்தாக்கிலும் சிலாங்கூரின் சில பகுதிகளிலும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் நீர் நெருக்கடியைச் சமாளிக்க கூட்டரசு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக முஹைடின் தெரிவித்தார்.
அந்தத் திட்டத்தின் கீழ் பாகாங்கிலிருந்து சிலாங்கூருக்கு சுத்திகரிக்கப்படாத நீரைக் கொண்டு வரும் திட்டம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு கட்டத்திலும் 23 கட்டுமானங்கள் சம்பந்தப்பட்டிருக்கும்.
சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றின் தண்ணீர் தேவைகளைச் சமாளிக்க லங்காட் 2, 2025ம் ஆண்டு வரை 1.89 பில்லியன் லிட்டர் நீரை சுத்திகரிக்கும்.
சிலாங்கூரில் உள்ள பல நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகரித்து வரும் தேவையைச் சமாளிப்பதற்கு 24 மணி நேரமும் இயங்குவதாகவும் 100 விழுக்காடு ஆற்றலையும் பயன்படுத்துவதாகவும் துணைப் பிரதமர் சொன்னார்.
சிலாங்கூரில் நீர் வளச் சலுகைகளைப் பெற்றுள்ள நான்கு நிறுவனங்களிடமிருந்து நீர் நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ள சிலாங்கூர் அரசாங்கம் முயலுவது பற்றிக் குறிப்பிட்ட அவர், சட்டத்துக்கும் நடைமுறைகளுக்கும் ஏற்ப அவை செய்யப்படும் வரையில் கூட்டரசு அரசாங்கத்துக்கு எந்த ஆட்சேபமும் இல்லை எனச் சொன்னார்.
அவ்வாறு எடுத்துக் கொள்வது முறையான விவாதங்கள், நடைமுறைகள் மூலம் அவை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் முஹைடின் வலியுறுத்தினார்.
Syarikat Pengeluar Air Berhad, Konsortium Abbas, Syarikat Bekalan Air Selangor, Puncak Niaga ஆகியவை அந்த நான்கு நீர் வளச் சலுகைகளைப் பெற்றுள்ள நிறுவனங்களாகும்.