எந்த மொழியில் இருந்தாலும் பைபிள் பைபிள்தான்: பெர்காசாவுக்கு அறிவுறுத்தல்

1bibleதாம், பெர்காசா  தலைவர் இப்ராஹிம் அலி மீது  அவதூறு கூறியுள்ளதாக நாடு முழுக்க செய்யப்பட்டுள்ள போலீஸ் புகார்களை அபத்தம் என்று ஒதுக்கித்தள்ளியுள்ளார் மனித உரிமை வழக்குரைஞர் சித்தி ஸபேடா காசிம்.

“அது மலாய்மொழி பைபிளா, ஆங்கிலமொழி பைபிளா, கடாசான்மொழி பைபிளா, தமிழ்மொழி பைபிளா என்பது பிரச்னையில்லை. விவகாரமே அவர் பைபிளை எரிக்கச் சொன்னார் என்பதுதான்”, என்று மலேசியாகினியிடம் அவர் தெரிவித்தார்.

ali1சித்தி ஸபேடா, இப்ராகிம்(வலம்) கூறியதைத் திரித்துக் கூறினார் என நெகிரி செம்பிலான் பெர்காசா தலைவர் முகமட் நூர் நோர்டின் குறிப்பிட்டதாக உத்துசான் மலேசியாவில் வெளிவந்துள்ள செய்தி பற்றி அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

“உண்மையில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் மலாய் மொழி பைபிள்களையும் ஜாவி எழுத்துக்களில் உள்ள பைபிள்களையும் மட்டுமே எரிக்க வேண்டும் என்று எங்கள் பெர்காசா தலைவர் கூறினார். எல்லா பைபிள்களும் எரிக்கப்பட வேண்டும் என அவர் உத்தரவிட இல்லை,”என முகமட் நூர்  கூறியிருந்தார்.

ஜனவரி 23-இல், சித்தி ஸபேடா செய்த போலீஸ் புகாருக்குப் பதிலடியாக நேற்று கோலாலம்பூர், கிளந்தான், பினாங்கு, சிலாங்கூர், பேராக் ஆகியவற்றில் பெர்காசா உறுப்பினர்கள் போலீஸில் புகார் செய்துள்ளனர்.

‘மிரட்டும் செயல்’

1bible2 zitiஇப்போலீஸ் புகார்கள் ஒருவகை மிரட்டும் செயலாகும் என சித்தி ஸபேடா(இடம்) வருணித்தார்.

“எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.ஒருவேளை, அவர்களுக்கு எதிராக மற்றவர்கள் புகார் செய்யக்கூடாது என்று மிரட்டுவதற்காக இப்படிச் செய்கிறார்களோ, என்னவோ”, என்றாரவர்.

தாம், இப்ராகிமுக்கு எதிராகக் கூட்டாக புகார் செய்த 12 பேர்களின் பிரதிநிதி மட்டுமே என்பதை சித்தி ஸபேடா சுட்டிக்காட்டினார். ஆனாலும், பெர்காசா அவர்மீது மட்டுமே புகார் செய்துள்ளது.

“அவர்கள் எத்தனை போலீஸ் புகார்கள் வேண்டுமானாலும் செய்யட்டும். அவற்றை விசாரிக்கும் பொறுப்பை போலீசிடமே  விட்டு விடுகிறேன்”, என்றாரவர்.

டிஏபி தலைவர் கர்பால் சிங்கும் ஜனவரி 22-இல், இப்ராகிமுக்கு எதிராக போலீஸ் புகார் ஒன்றைச் செய்தார். ஆனால், அவரை எதிர்த்து பெர்காசா இதுவரை நடவடிக்கையில் இறங்கவில்லை.

TAGS: