13வது பொதுத் தேர்தலில், பிஎன்னுக்கு மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெறும் ஆற்றல் உண்டு என்கிறார் சிறப்பு விவகாரத் துறை (ஜாசா) தலைமை இயக்குனர் புவாட் ஹசான்.
சீனர்களின் குறைந்தது 30விழுக்காட்டு வாக்குகளையும், மலாய்க்காரர்களிடமிருந்தும் இந்தியர்களிடமிருந்தும் முறையே 65விழுக்காட்டு வாக்குகளையும் பெற்றால் பிஎன்னுக்கு மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்து விடும் என்றாரவர்.
ஜோகூரில், பிஎன்னுக்கு மலாய்க்காரர் ஆதரவு 80விழுக்காட்டுக்குமேல் இருப்பதாக புவாட் கூறினார். 2008-க்குப் பிறகு இந்தியர்களின் ஆதரவும் திரும்பி வந்துள்ளது. சீனர்களின் ஆதரவும் அதிகரித்து வருகிறது.
“கடுமையாக உழைத்தால்….எதிர்வரும் தேர்தலில் பிஎன் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெற முடியும்”.இன்று, ஜோகூர் பாருவில், ஜோகூர் அனைத்துலக மாநாட்டு மையத்தில், சமூக ஊடக பங்காளிகளின் ஒன்றுகூடல் நிகழ்வில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் புவாட் இவ்வாறு கூறினார்.
இணையமும் சமூக ஊடகங்களும் முக்கியமானவை
பிஎன்னின் சமூக ஊடகங்களான டிவிட்டர், முகநூல் முதலியவை முந்தைய தேர்தலின்போது இருந்ததைவிட இப்போது சிறந்த ஆயத்த நிலையில் இருப்பதாக அவர் சொன்னார்.
அவை, 13வது பொதுத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கப் போகும் 2.8மில்லியன் இளம் வாக்காளர்களுடன் அணுக்கமாக தொடர்புகளை வைத்திருப்பது அவசியம் என்றும் அவர் குறிபிட்டார்.
ஜாசா. தகவல் அமைச்சின்கீழ் உள்ள அரசுத் துறையாகும்.
-பெர்னாமா