இப்ராஹிம் அலிக்கு எதிராக ஏழு புகார்கள்

bible‘அல்லாஹ்’ என்னும் சொல்லைக் கொண்ட மலாயிலும், ஜாவியிலும் எழுதப்பட்ட பைபிள் பதிப்புக்களை எரிக்குமாறு சர்ச்சைக்குரிய அறைகூவலை விடுத்த பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி-க்கு எதிராக ஏழு போலீஸ் புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

பினாங்கு போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹானாபி பட்டர்வொர்த் போலீஸ் நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்த போது அதனை உறுதிப்படுத்தினார்.

குற்றவியல் சட்டத்தின் 298ஏ பிரிவின் கீழ் பெர்க்காசா தலைவர் விசாரிக்கப்படுவதாக அப்துல் ரஹிம் சொன்ன போதிலும் போலீசார் இன்னும் இப்ராஹிமின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யவில்லை.

குற்றவியல் சட்டத்தின் 298ஏ பிரிவு, ஒருவருடைய சமய உணர்வுகளை வேண்டுமென்றே காயப்படுத்துவது சம்பந்தப்பட்டதாகும். அதற்கு ஒராண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படுவதற்கு அது வகை செய்கின்றது.

“அந்தப் புகார்கள் மீது அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய நாங்கள் அவரை விரைவில் அழைப்போம்,” என அப்துல் ரஹிம் சொன்னார்.

இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் இப்ராஹிம் அழைக்கப்படுவாரா என்பதை உறுதி செய்யுமாறு நெருக்கப்பட்ட போது ” வெகு, வெகு விரைவில்” என்று மட்டும் சொன்னார்.

இப்ராஹிமுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள போலீஸ் புகாரைத் தொடர்ந்து போலீஸ் நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் கூறினார்.

பைபிள் எரிப்பு நிகழ்வு நடக்கவில்லை

பாசிர் மாஸ் எம்பி-யுமான இப்ராஹிம் கடந்த வாரம் பெர்மாத்தாங் பாவ்-வில் சர்ச்சைக்குரிய அந்த அறைகூவலை விடுத்ததாக தகவல்கள் தெரிவித்தன.

தமது அறைகூவல் கிறிஸ்துவர்களைக் காயப்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது எனச் சொல்லப்படுவதை மறுத்துள்ள அவர், கூட்டரசு அரசமைப்புக்கு எதிராக நடந்து கொள்வதாக கூறப்படுகின்றவர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை அது என்றார்.

bible1அவரது அறைகூவலைத் தொடர்ந்து இன்று காலை நகராட்சி மன்றத் திடலில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்ட ‘பைபிள் எரிப்பு விழா’வில் பொது மக்களை அழைக்கும் துண்டுப் பிரசுரம் ஒன்றைப் பெற்ற பின்னர் பட்டர்வொர்த்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று போலீசில் புகார் செய்தது.

அந்த நிகழ்வு நிகழாதது குறித்து அப்துல் ராஹிம் பினாங்கு மாநில மக்களுக்கு குறிப்பாக ‘மலாய் பைபிள் எதிர்ப்பு’ எனக் கூறிக் கொள்ளும் குழு ஒன்றின் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்காத முஸ்லிம்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பினாங்கு ஜெலுத்தோங்கில் கடந்த வாரம் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு வெளியில் நிகழ்ந்த பைபிள் விநியோக சம்பவம் தொடர்பில் புதிய தகவல்கள் ஏதுமில்லை என்றும் அப்துல் ரஹிம் சொன்னார்.

அந்த விவகாரம் மீது ஏழு புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. போலீஸ் விசாரணையில் உதவுவதற்காக பல்வேறு தரப்புக்களிடமிருந்து 17 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.