பாஸ் ஆன்மிகத் தலைவர், நிக் அசீஸ் நிக் மாட், பினாங்கு சென்று பக்காத்தான் பங்காளிகளையும் கிறிஸ்துவ சமூகத்தினரையும் சந்தித்துள்ளார். அவர், மலாய்மொழி பைபிளில் இடம்பெற்றுள்ள ‘அல்லாஹ்’என்ற சொல்லால் ஏற்பட்ட சர்ச்சையைச் சரிப்படுத்தும் முயற்சியாகத்தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டார் எனத் தெரிகிறது.
நேற்று, தைப்பூசத் திருநாளில் டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங்கின் வீட்டுக்குத் திடீர் வருகை புரிந்த நிக் அசீஸ், அங்கேயே தம் 82வது பிறந்த நாளையும் கொண்டாடினார். அதன்பின்னர் இன்னொரு அபூர்வ சந்திப்பு நிகழ்ந்தது. பினாங்கு மறைமாவட்ட ஆயர் செபாஸ்டியன் பிரான்சிசைச் சந்தித்தார்.
கிளந்தான் மந்திரி புசாரின் தங்குவிடுதி அறையில் நிகழ்ந்த அச்சந்திப்பின்போது உடன் இருந்த சமூக ஆர்வலர் அனில் நெட்டோ, “நல்லெண்ணத்தின் அடையாளமாக” நிக் அசீஸ் ஆயருக்கு ஒரு கேக்கை அன்பளிப்பாக வழங்கினார் என்றார்.
“பினாங்கு மறைமாவட்டம் பினாங்கு, கெடா, பேராக், கிளந்தான் ஆகியவற்றை உள்ளடக்கியது”, என சமூக சீரமைப்பு இயக்கமான அலிரான் பொருளாளருமான நெட்டோ கூறினார்.
“கிளந்தானும் பினாங்கு மறைமாவத்தில் அடக்கம் என்று சொல்லப்பட்டதும் ஆயரை கோத்தா பாருவில் தமது இல்லத்துக்கு வருகை தருமாறு நிக் அசீஸ் அழைப்பு விடுத்தார்.
“நிக் அசீசுக்கு இன்னொரு வேலை இருந்தது. ஆனால், அதை ஒதுக்கிவைத்துவிட்டு ஆயரைச் சந்தித்தார். ஆயர் அவரின் உடல்நலனுக்குப் பிரார்த்தனை செய்வதாகக் கூறினார்.
சக்தியை விரயமாக்கும் சமயச் சர்ச்சைகள்
சமய விவகாரங்களால் சர்ச்சை உண்டானதை எண்ணி நிக் அசீஸ் வருத்தப்பட்டார் என்று நெட்டோ கூறினார்.
ஆயரும் (படத்தில் வலம் இருப்பவர்) அக்கருத்துடன் ஒத்துப்போனார். “அதில் சக்தியை விரயமாக்காமல் காணாமல்போன குழந்தைகளைக் கண்டுபிடித்தல் போன்ற முயற்சியில் ஈடுபடலாம்”, என்றாரவர்.
நேற்று பட்டர்வர்தில் “மலாய்மொழி பைபிள்-எதிர்ப்புக் கும்பல் ஒன்று பைபிளை எரிக்கப்போவதாகக் கூறப்பட்டிருந்த நேரத்தில் அவர்களின் இச்சந்திப்பு நிகழ்ந்தது. ஆனால், பைபிளை எரிக்கும் நிகழ்வு எதுவும் நடைபெறவில்லை.
ஜுலுத்தோங்கில் ஒரு பள்ளிக்கு வெளியில் மலாய்க்கார மாணவர்களிடையே பைபிள் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து பைபிள் மீதான சர்ச்சை எழுந்தது.
பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி, மலாய் அல்லது ஜாவி மொழி பைபிள்களை எரிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார். தம் நோக்கம் மலாய்மொழி பைபிளை எரிப்பதுதானே தவிர கிறிஸ்துவர்களின் மனதைப் புண்படுத்துவதல்ல என்றும் அவர் கூறிக்கொண்டார்.
பினாங்கு வருகை ‘வரலாறு படைத்தது’
நிக் அசீசுக்கு பினாங்கில் பல அலுவல்கள். அவற்றுள் பத்து உபான் பாரம்பரிய பள்ளிவாசலில் மினாரா கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவதும் ஒன்று.
நிக் அசீஸ் கர்ப்பாலின் வீட்டுக்கு வருகை புரிவதற்கு ஏற்பாடு செய்த பிகேஆர் பத்து உபான் சட்டமனற உறுப்பினர் எஸ்,இரவீந்திரன், அவர் பினாங்குக்கு வருகை புரிந்ததன்மூலம் “ஒரு வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
“நேற்றிரவு நிக் அசீசும் கர்ப்பாலும் பத்து உபான் ‘செராமா’வில் ஒரே மேடையில் பேசியதன் மூலம் இன்னொரு வரலாறும் நிகழ்த்தப்பட்டது”, என்று மாநில பிகேஆர் உதவித் தலைவருமான அவர் சொன்னார்.