2013-2015 கல்விப் பெருந்திட்டம் அரசியலாக்கப்படுவதை தவிர்ப்பதற்காக அதன் இறுதிப் பதிப்பை வெளியிடுவதை பொதுத் தேர்தல் முடியும் வரை தள்ளி வைக்குமாறு பல பெற்றோர் அமைப்புக்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளன.
அந்தப் பெருந்திட்டம் தேர்தல் பிரச்னையானால் அதிர்ச்சி தரும் பின் விளைவுகள் ஏற்படலாம், அதனால் கல்வி முறை பாதிக்கப்படும் என அவை அஞ்சுகின்றன. அந்த கல்விப் பெருந்திட்டம் வரும் புதன் கிழமை அமைச்சரவையில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கல்வி அரசியலாக்கப்படக் கூடாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உண்மையில் விரும்பினால் அந்தத் திட்டத்தை எங்களிடம் காட்டுங்கள். அதனை உங்கள் தேர்தல் கொள்கை அறிக்கையின் ஒரு பகுதியாக்க வேண்டாம்.”
“தேர்தல் முடியும் வரை அதனை வைத்திருங்கள். அந்த பெருந்திட்டத்துக்கு அமைச்சரவை புதன் கிழமை ஒப்புதல் அளிப்பதைக் காண நாங்கள் விரும்பவில்லை.”
“அமைச்சரவை அதனை விவாதிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் மில்லியன் கணக்கான பிள்ளைகளும் எதிர்காலத் தலைமுறையினரும் சம்பந்தப்பட்டிருப்பதால் அது மிக முக்கியமான முடிவாகும்,”
கல்விக்கான பெற்றோர் நடவடிக்கைக் குழுவின் தலைவர் நூர் அஸிமா அப்துல் ரஹிம் இன்று கூறினார்.
நாட்டின் கல்விக் கொள்கை மீது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் என்ன கருத்தைக் கொண்டுள்ளன என்பதை அறிந்து கொள்வதற்கு வாக்காளர்களுக்கு உரிமை உள்ளதை அவரிடம் சுட்டிக் காட்டப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த நூர் அஸிமா, “ஆம் ஆனால் பெருந்திட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம். அது மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும். அவசரம் ஏன் ?” என்றார்.
சிலாங்கூரில் அக்கறையுள்ள பெற்றோர் அமைப்பு (CPS), கல்வி மீதான மலாக்கா பெற்றோர் நடவடிக்கைக் குழு (Magpie), கல்விக்கான பினாங்கு போராட்ட அமைப்பு (Hope), கணித அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பதை ஆதரிக்கும் அமைப்பு (PPSMI) ஆகியவற்றின் பேராளர்கள் கலந்து கொண்ட கூட்டு நிருபர்கள் சந்திப்பில் அவர் பேசினார்.
அந்தப் பெருந்திட்டம் மீதான பூர்வாங்க அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர் நடத்தப்பட்ட 14 கலந்துரையாடல்களில் தாங்கள் சமர்பித்த கோரிக்கைகள் மொழிப் பகுதியில் ஒரே ஒரு சொற்றொடரில் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றி அந்த அமைப்புக்கள் வருத்தம் அடைந்துள்ளன.