பிகேஆர் துணைத் தலைவருடைய இணையத் தளம் மாசுபடுத்தப்பட்டது

hackபிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, இன்று காலை தமது இணையத் தளம் மாசுபடுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

நேற்று பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயிலும் தமது முகநூல் பக்கம்  களங்கப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று காலை அஸ்மினுடைய இணையத் தளத்தைச் சோதனை செய்த போது வழக்கமான வெளிர் நீல நிறப் பின்னணிக்குப் பதில் கறுப்புப் பின்னணி போடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

“இது பக்காத்தான் ராக்யாட் தலைமைத்துவத்திற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை,” என  ‘SGP Cyber Army’ என்னும் புனை பெயரில் அந்த கொத்தர் (hacker)  அஸ்மின் இணையத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“Ops Goyang” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள மாசுபடுத்தும் அந்த முயற்சி அஸ்மினுடைய இணையத் தளம் அத்தகைய தாக்குதல்களுக்கு இலக்காகக் கூடிய சாத்தியம் இருப்பதை அவருக்குத் தெரியப்படுத்துவதற்காகும்.”

“வரும் 13வது பொதுத் தேர்தலில் உங்கள் எதிரிகளுடைய இணையத் தாக்குதல்களைக் குறைத்து மதிப்பிட  வேண்டாம். அவர்கள் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள், நம்மைக் காட்டிலும் நவீனமானவர்கள்,” என அந்தக் கொத்தர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த இணையத் தளத்தை அவர்கள் முழுமையாக கைப்பற்ற முடியும். உங்கள் அதிர்ஷ்டம் நாங்கள் அங்கு இருந்ததால் அவர்கள் அதனைச் செய்யவில்லை,” என்றார் அவர்.

கடுமையான ஆனால் நட்புறவான எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் கட்சியின் எதிரிகள் மாசுபடுத்தும் முயற்சியை மேற்கொண்டிருக்கக் கூடிய சாத்தியத்தை நாங்கள் நிராகரிக்கவில்லை என அஸ்மின் அலுவலகம் இன்று காலை விடுத்த அறிக்கை தெரிவித்தது.

பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் சோதனை செய்த போது அஸ்மின் இணையத் தளம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விட்டதைக் காண முடிந்தது.

நேற்று தமது முகநூல் பக்கம் மாசுபடுத்தப்பட்டுள்ளது என்றும் இராணுவ வீரர்களுக்கான ஒய்வூதிய நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக தாம் சொன்னது தொடர்பில் தற்காப்பு அமைச்சர் ஸாஹிட் ஹமிடியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக கூறும் பொய்யான தகவல் அதில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் ராபிஸி கூறியிருந்தார்.

“மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாக கூறும் எந்த அறிக்கையையும் நான் வன்மையாக மறுக்கிறேன். அந்தப் பிரச்னை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் நான் உறுதியாக நிற்கிறேன்.  இராணுவத்தினரின் ஓய்வூதிய நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது பற்றி நான் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவேன்,” என்றும் அவர் சொன்னார்.

 

TAGS: