தூய்மையான தேர்தல்களுக்கும் வெளிநாடுவாழ் மலேசியர்களின் வாக்களிக்கும் உரிமைகளுக்காகவும் போராடும் இரண்டு வெளிநாட்டு அமைப்புகள், வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் அண்மையில் செய்துகொடுக்கப்பட்ட வாக்களிப்பு வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு தவறாமல் அஞ்சல்வழி வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளன.
மைஓவர்சீஸ்வோட் (எம்ஓவி) என்ற அமைப்பும், தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்காக போராடும் பெர்சே-க்கு ஆதரவாக செயல்படும் பன்னாட்டு அமைப்பான குளோபல் பெர்சே-யும் நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் அவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளன.
தேர்தல் ஆணையம் வெளிநாடு வாழ் வாக்காளர்கள் அஞ்சல்வழி வாக்களிக்க அறிவித்த தகுதிப்பாடுகளையும் நடைமுறைகளையும் கண்டு வெளிநாட்டில் உள்ள மலேசியர்களில் பலர் வாக்குகளில் மோசடி நிகழும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி வாக்களிக்க தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது.
ஆனால், எம்ஓவி-யும் குளோபல் பெர்சே-யும், வாக்களிப்புக்குப் பின்னர் அந்த வாக்குகளில் மோசடி செய்யும் அபாயம் குறைவு என்றும் 2003 அஞ்சல் வாக்களிப்புச் சட்டங்கள் அவ்வாறு நிகழ்வதைத் தடுப்பதாகவும் கூறுகின்றன. பெருமளவில் மோசடி வேலைகள் நடந்தால் அவற்றை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
“வாக்களிக்காமல் இருப்பதுதான் ஆபத்து. அந்த அஞ்சல் வாக்குகள் அப்படியே வாக்காளர் பட்டியலில் உள்ள ‘ஆவி வாக்காளர்’களுக்கு மாற்றி விடப்படலாம்.
“எனவே, வெளிநாடுவாழ் வாக்காளர்கள் வாக்களிக்காமல் இருப்பதுதான் அதிக ஆபத்து என்று கருதுகிறோம். அது அவர்களின் பெயர்களில் மற்றவர்கள் வாக்களிக்க இடமளித்துவிடும், ஆதலால், வெளிநாட்டில் உள்ள மலேசியர்கள், மலேசியா திரும்பி வாக்களிக்க முடியாத நிலை இருந்தால் அஞ்சல்வழி வாக்களிக்க விண்ணப்பித்து குறிப்பிட்ட நாளில் தவறாமல் வாக்களிக்கவும் வேண்டும் என வலியுறுத்துகிறோம்”, என்று அந்த அறிக்கை கூறியது.
அஞ்சல்வழி வாக்களிப்பு நேர்மையாக நடைபெறுவதை உறுதிப்படுத்த வேட்பாளர்களிடம் அவர்களின் தொகுதிகளில் உள்ள அஞ்சல்வழி வாக்காளர்களின் பட்டியல் ஒன்று கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
“மலேசியாவின் வெளிநாட்டுத் தூதரகங்களில் வாக்களிப்பைக் கண்காணிக்க ஒவ்வொரு கட்சியின் முகவர்களை அனுமதிக்க வேண்டும் என இசி-யையும் விஸ்மா புத்ரா(வெளியுறவு அமைச்சு)-வையும் கேட்டுக்கொள்வோம்.
“இசியும் விஸ்மா புத்ராவும் அதற்கு இணக்கம் தெரிவிக்காவிட்டால், தூதரகங்களுக்கு வெளியில் நாங்களே சாவடிகளை அமைத்து கண்காணிப்புப் பணியைச் செய்வோம்”, என்றவை கூறின.