சபா கள்ளக் குடியேறிகள் மீதான ஆர்சி என்ற அரச விசாரணை ஆணைய அறிக்கை மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் அளித்துள்ள வாக்குறுதிக்கு அர்த்தமே இல்லை என டிஏபி கூறுகிறது.
காரணம் மலாய் மொழி பைபிள்களுக்கு எரியூட்டுமாறு அறைகூவல் விடுத்த பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி மீது அப்துல் கனி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அது தெரிவித்தது.
அது மட்டுமல்ல போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை அமைக்குமாறு முன்னைய ஆர்சிஐ வழங்கிய பரிந்துரையை நிறைவேற்றவும் அப்துல் கனி தவறி விட்டார் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் சொன்னார்.
“பிஎன் தலைவர்கள், அவர்களது சேவகர்கள் அல்லது அணுக்கமான ஆதரவாளர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அப்துல் கனி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கோழைத்தனமாக நடந்து கொண்டுள்ளார்.”
“பைபிள் எரிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட பெர்க்காசா தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்ததின் மூலம் அவர் தமது இரட்டை வேடத்தைக் காட்டியுள்ளார். கோழைத்தனத்தையும் காட்டியுள்ளார்.
பைபிள் எரிக்கப்படவில்லை என்றும் பைபிள் உண்மையில் எரிக்கப்பட்டால் மட்டுமே தாம் நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் அபத்தமான காரணத்தை முன் வைத்துள்ளார்.”
“ஆனால் அதே வேளையில் டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் மீது தொடுக்கப்பட்ட தேசத் துரோக வழக்கு போன்ற பக்காத்தான் ராக்யாட் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் அவர் மிகவும் துணிச்சலைக் காட்டியுள்ளார்,” என லிம் சொன்னார்.
சபாவில் கள்ளக் குடியேறிகள் மீதான ஆர்சிஐ வழங்கும் அறிக்கை மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என சட்டத்துறைத் தலைவர் நேற்று உறுதி அளித்திருந்தார்.
கிரிமினல் சக்திகள் சம்பந்தப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தவறுகள் சரி செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.
“கிரிமினல் குற்றங்கள் இருந்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இது அரசாங்கத்தின் வாக்குறுதி. ஆர்சிஐ அதற்காகத்தான் அமைக்கப்பட்டது.”
அப்துல் கனி தமது அரசியல் எஜமானர்களுக்குச் சேவை செய்ததைத் தவிர வேறு எந்தக் கடமையையும் செய்யாததால் அவரை சட்டத்துறைத் தலைவர் பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது என பினாங்கு முதலமைச்சருமான லிம் கூறினார்.