சுகுமாரனுக்கு நீதி கேட்டு 50 பேர் போராட்டம்

protestசி சுகுமாரன் மரணம் தொடர்பில் போலீஸ் அளித்துள்ள பதில் மீது மனநிறைவு அடையாத 50 பேர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்துக்கு முன்பு இன்று அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவர்களை பல அரசு சாரா அமைப்புக்களும் எதிர்க்கட்சிகளும் வழி நடத்தின. இன்று காலை மணி 10.45 தொடக்கம் அவர்கள் குந்தியிருப்பு மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தக் குழுவினர் போலீசாரிடமிருந்து இரண்டு விஷயங்களைக் கோருவதாக சுகுமாரன் குடும்பத்தைப் பிரதிநிதிக்கும் வழக்குரைஞர்களில் ஒருவரான லத்தீப்பா கோயா கூறினார்.

இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்படும் என பத்திரப்பூர்வமாக உறுதி அளிப்பது, அந்த விவகாரத்தைக் கொலை என்று வகைப்படுத்துவது ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள் என அவர் தெரிவித்தார்.

“நாங்கள் இன்று காலை தொடக்கம் இங்கு இருக்கிறோம். போலீசார் எங்களைச் சந்திக்க சில பொது உறவு அதிகாரிகளை மட்டுமே அனுப்பியுள்ளனர்.”protest1

“நாங்கள் அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டோம். புலனாய்வுத் துறையின் பேராளர்களை மட்டுமே நாங்கள் சந்திக்க விரும்புகிறோம்,” என பிகேஆர் சட்டப் பிரிவுத் தலைவருமான லத்தீப்பா சொன்னார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘Najib tindas masyarakat India’ ( நஜிப் இந்திய சமூகத்தை ஒடுக்குகிறார் ), ‘Rakyat dizalimi, kuasa disalahgunakan’ ( மக்கள் தவறாக நடத்தப்படுகின்றனர் (அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது) போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் வைத்துள்ளதாக லத்தீப்பா  தெரிவித்தார்.

லத்தீப்பாவுடன் பிகேஆர் உதவித் தலைவர்களான நுருல் இஸ்ஸா அன்வார், என் சுரேந்திரன், காப்பார் எம்பி எஸ் மாணிக்கவாசகம், தெலுக் இந்தான் எம்பி எம் மனோகரன், உலு லங்காட் எம்பி சே ரோஸ்லி சே மாட், பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன், சுவாராம் நிர்வாக இயக்குநர் இ நளினி, பெங் ஹாக்கிற்கான மலேசியர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இங் யாப் ஹுவா ஆகியோரும் அங்கு இருந்தார்கள்.

சுகுமாரனின் தாயார் கே மணிமேகலையும் அங்கு காணப்பட்டார்.