‘மலேசிய பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய மதிப்பீடு சரியல்ல’

1pressஅண்மையில் வெளியிடப்பட்ட உலகப் பத்திரிகைச் சுதந்திரப் பட்டியலில் மலேசியாவுக்கு தாழ்ந்த இடம் வழங்கப்பட்டிருப்பது ஆய்வாளர்கள் “கணிப்பு வேலையைச் சரியாகச் செய்யவில்லை” என்பதைக் காட்டுகிறது என்கிறார் மலாய் மெயில் நாளேட்டின் முன்னாள் செயல்முறை ஆசிரியர் அஹிருடின் அட்டான்.

1press1”நான் என்ன நினைக்கிறேன் என்றால், Reporters Sans Frontiers (ஆர்எஸ்எப் எல்லைகளற்ற செய்தியாளர்கள்) என்ற அந்த அமைப்பு நம்மைப்போன்ற சிறிய நாடுகள் என்று வரும்போது ஆய்வுவேலைகளைச் சரியாக செய்வதில்லை”, என ரோக்கி’ஸ் புரு என்ற பெயரில் வலைப்பதிவிட்டுவரும் அஹிருடின் கூறினார்.

“செய்திகளைப் பொறுத்தவரை இங்கு தாராளமான கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. மிகப் பெரிய இணைய செய்தித்தளங்களான மலேசியாகினி, த மலேசியன் இன்சைடர் போன்றவை இங்கு உருவாகியுள்ளன.

“நஜிப் கொடிய, அடக்குமுறைச் சட்டங்கள் பலவற்றை ஒழித்துள்ளார்.  ஆர்எஸ்எப் இதைக் கவனிக்காததுதான் வியப்பாக உள்ளது”, என்று மலேசியாகினி அவரைத் தொடர்புகொண்டபோது அஹிருடின் கூறினார்.

1press2உலகப் பத்திரிகைச் சுதந்திரம் மீதான தரவரிசைப் பட்டியலில் மலேசியாவுக்கு 145-வது இடம் வழங்கப்பட்டிருப்பது பற்றி அவர் கருத்துரைத்தார். கடந்த ஆண்டு பெற்றிருந்த இடத்தைவிட இவ்வாண்டு அது 23 இடங்கள் இறக்கம் கண்டிருந்தது. 2002-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்பட்டியலில் மலேசியாவின் நிலை இவ்வளவு மோசமாக இதற்குமுன் இருந்ததில்லை.

இந்தியாவும் இந்தோனேசியாவும் பத்திரிகைச் சுதந்திரத்துக்குப் பேர் பெற்ற நாடுகள் ஆனால், அவற்றுக்கும் மலேசியாவுக்கு அருகில் இடம் வழங்கப்பட்டிருப்பதும் தரவரிசையைச் சந்தேகிக்க வைக்கிறது.

ஆர்எஸ்எப் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 140-வது இடத்திலும் இந்தோனேசியா 146-வது இடத்திலும் உள்ளன.

சீரமைப்பு ‘மேலோட்டமானது’

ஆனால், அத்தரவரிசை உண்மை நிலவரத்தைத்தான் பிரதிபலிக்கிறது என்கிறார்  சுயேச்சை இதழியல் மைய (சிஐஜே) செயல்முறை இயக்குனர்  மஸ்ஜலிசா ஹம்சா.

மலேசியாவின் கொடிய சட்டங்களில்  திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும் அவை மேலோட்டமானவை என்று மஸ்ஜலிசா கூறினார்.

“தரவரிசையில் தாழ்ந்த இடம் வழங்கப்பட்டிருப்பது மலேசியாவில் உள்ள ஊடகச் சுதந்திரத்தின் பிரதிபலிப்பு என்றே சிஐஜே நம்புகிறது.

“2012-இல், அச்சக, வெளியீட்டக சட்ட(பிபிபிஏ)த்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன என்றாலும் அத்திருத்தங்கள் மற்ற இடங்களில் ஊடகச் சுதந்திரம் தாக்கப்படுவதைத் தடுப்பதற்கு உதவவில்லை.

1press 3“2012-இல், அச்சுருத்தப்பட்ட, தாக்கப்பட்ட, கைது செய்யப்பட்ட செய்தியாளர்களின் எண்ணிக்கை 12-க்கும் அதிகமாகும். அவர்களின் உடமைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. பறிமுதல் செய்யப்பட்டவை திருப்பிக் கொடுக்கப்படவும் இல்லை”, என்று மஸ்ஜலிசா (வலம்) நேற்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

மலேசியாகினியும்கூட அதன் வெளியிடும் உரிமையை நிலைநிறுத்திக்கொள்ள நீதிமன்றம் சென்று வாதாட வேண்டி இருந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“வலைப்பதிவர்களும் அரச குடும்பத்தாரைக் குறைகூறியவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கேலிச் சித்திரக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டதும் அவரது கேலிச்சித்திர நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டதும்கூட ‘சட்டத்துக்குட்பட்டதுதான்’ என்று ஒரு நீதிமன்றம் கூறியுள்ளது.

“பெர்சே 3.0 பேரணி நடப்பதற்குமுன் அது பற்றிய செய்திகள் பிஎன்னுக்கு சொந்தமான ஊடகங்களில் இருட்டடிப்புச் செய்யப்பட்டன”.

மொத்தத்தில், மலேசியாவின் தரவரிசை வெட்கேடானது என்று சிஐஜே தலைவர் குறிப்பிட்டார்.

இதனிடையே தேசிய பத்திரிகையாளர் சங்க(என்யுஜே)த் தலைவர், சின் சங் சியு, பத்திரிகைச் சுதந்திரம் போதுமான அளவு இல்லை என்றார்.

ஆனாலும், 13வது பொதுத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டது தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது திட்டமிடப்பட்டே செய்யப்பட்டதா என்றும் அவர் வினவினார்.

“இந்த நேரத்தில் அது(பட்டியல்) வெளிவந்தது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. யாரோ அரசாங்கத்தின் முயற்சிகளைக் கெடுக்க முயல்வதுபோல் தெரிகிறது”, என்று அவர் கூறியதாக நேற்றைய மலாய் மெயில் அறிவித்துள்ளது.