“அல்லாஹ்” என்னும் சொல்லைக் கொண்ட மலாய்மொழி பைபிளை எரிக்க வேண்டும் என்று அம்னோ என்றுமே மொழிந்ததில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று கூறினார்.
மலாய்க்காரர் உரிமைகளுக்காகப் போராடும் வலச்சாரி அமைப்பான பெர்காசா-வின் தலைவர் இப்ராகிமின் பேச்சு அம்னோவின் கருத்தைப் பிரதிபலிக்காது என்றாரவர்.
“இப்ராகிம் அலி (இடம்) அம்னோ உறுப்பினர் அல்ல. அவர் அம்னோவுக்கு ஆதரவாக பேசலாம். அதற்காக அம்னோவின் பேச்சாளர் ஆக மாட்டார்”. மகாதிர் அவரின் வலைப்பதிவில் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.
புதிதாக அச்சிடப்பட்ட பைபிள்களை எரிக்க வேண்டும் என்று இப்ராகிம் அலி சொன்னது துரதிர்ஷ்டவசமானது.
“வேண்டாத பிரசுரங்களை ஒழிக்க அது ஒரு வழியாக இருக்கலாம். திருக்குர் ஆன் விசயத்தில் எப்படி அதைச் செய்ய முடியாதோ அதேபோல் பைபிள் விசயத்திலும் அதைச் செய்ய முடியாது.
“ஆனால், இப்ராகிம் சொன்னது அம்னோவின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை. அவப்பேறாக சில அரசியல்வாதிகள் அது அப்படித்தான் என்று சொல்லி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற முயல்கிறார்கள்”, என்றாரவர்.
மலேசியர்களிடம் அரசியல் கருத்துவேறுபாடு இருக்கலாம், ஆனால், தேர்தல் வெற்றிக்காக சமயக் கருத்து வேறுபாடுகளைப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது.
“சமய சர்ச்சைகளை வெளியில் தெரியாமல் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். தீவிரவாதிகள் சமய விவகாரங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கக் கூடாது. அது கருத்துச் சுதந்திரத்துக்குத் தடை போடுவதுபோல் தெரியும். ஆனால், தாராளமய ஜனநாயக நாடாக இருந்தாலும் சுதந்திரத்துக்கும் வரம்புகள் தேவைதான். அப்போதுதான் ஜனநாயகம் நன்றாக செயல்படும்.
“இவ்விவகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்”, என்று மகாதிர் குறிப்பிட்டார்.