சபாவில் அடையாளக் கார்டு திட்டத்தில் (Project IC) தமக்கு பங்கு இருந்ததாகக் கூறப்படுவதை அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
அந்த விஷயம் அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்டதே இல்லை என்றும் அத்துடன் அதற்காக நடத்தப்பட்ட எந்தக் கூட்டத்திற்கும் தாம் தலைமை தாங்கவும் இல்லை, கலந்து கொள்ளவும் இல்லை என்றும் அவர் சொன்னார்.
குடியேற்றக்காரர்களுக்கு நீல நிற அடையாளக் கார்டுகளை வழங்கும் திட்டமானது, 1990-களுடன் நிற்கவில்லை, அது முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி காலத்திலும் கடந்த ஆண்டு நஜிப் அப்துல் ரசாக் ஆட்சி வரை தொடர்ந்தது என்றும் எதிர்த்தரப்புத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
“அந்த விஷயத்துக்காக அமைக்கப்பட்ட பணிக் குழுவை அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டும் அப்போது அவருக்கு அரசியல் செயலாளராக இருந்த அப்துல் அஜிஸ் சம்சுதீனும் அந்த நேரத்தில் உள்துறைத் துணை அமைச்சராக இருந்த காலஞ்சென்ற மெகாட் ஜுனிட் மெகாட் அயூப்-பும் வழி நடத்தினார்,” என அன்வார் மேலும் தெரிவித்தார்.
அந்த அடையாளக் கார்டு திட்டத்தில் அன்வார் சம்பந்தப்பட்ட்டிருந்ததாக மகாதீர் நேற்றுக் கூறியது பற்றி நிருபர்கள் வினவிய போது அவர் அவ்வாறு கூறினார்.
சபா குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையம் அழைத்தால் சாட்சியமளிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் மகாதீரின் கீழ் துணைப் பிரதமராக பணியாற்றியுள்ள இப்போதைய பிகேஆர் மூத்த தலைவரான அன்வார் சொன்னார்.