பொதுத் தேர்தல் மாயாஜாலமாக பாலஸ்தீனப் பயணத்தை பயன்படுத்த வேண்டாம்

palestineபிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பலஸ்தீனத்துக்குத் தாம் அண்மையில் மேற்கொண்ட பயணத்தை ஒர் அரசியல் மாயாஜாலமாகப் பயன்படுத்தக் கூடாது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சொல்கிறார்.

எது எப்படி இருந்தாலும் மலேசியர்கள், தங்கள் தாயகத்தையும் உரிமைகளையும் இழந்த பாலஸ்தீன மக்களுடைய போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அங்கு பிள்ளைகளும் பெண்களும் கூட கொல்லப்படுவதாக அவர் சொன்னார்.

“என்றாலும் தேர்தலுக்கு முன்னதாக அந்த விவகாரத்தை ஒர் அரசியல் மாயாஜாலமாக பயன்படுத்தும் மக்களுடன் நான் வேறுபடுகிறேன்,” என்றார் அன்வார்.

“பாத்தா, ஹாமாஸ் ஆகியவற்றுடனான எங்கள் (பக்காத்தான் ராக்யாட்) உறவுகள் ஊரறிந்தது. மார்ச் மாதத்திற்கு முன்னதாக நாம் அவர்களை (பாலஸ்தீனர்களை) அங்கீகரிக்க வேண்டியதில்லை,” என அவர்  கிண்டலாகக் கூறினார்.

என்றாலும் பாலஸ்தீனப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க நஜிப் மேற்கொள்ளும் முயற்சிகளையும் அத்துடன்  முதன் முறையாக பாலஸ்தீனத்தின் சட்டப்பூர்வமாக அரசாங்கமாக அவர் அங்கீகரித்துள்ளதையும்  அன்வார் வரவேற்றார்.palestine1

“பாலஸ்தீனப் போராட்டத்துக்கான ஆதரவு மீதான நமது கவனம் மலேசிய உள்நாட்டு அரசியலினால் தடம் புரண்டு விட நாம் அனுமதிக்கக் கூடாது,” என்றார் அவர்.

நஜிப்பின் பாலஸ்தீனப் பயணத்தைப் பற்றிய செய்திகளை முக்கிய நாளேடுகள் கடந்த ஒரு வாரமாக வெளியிட்டு வருகின்றன. அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று அவை கூறின. நஜிப் பயணத்தை பலர் ஆதரிப்பதாகவும் அவை தெரிவித்தன.

இன்று காலை பிகேஆர் தலைமையகத்தில் ஐவர் கொண்ட ஹாமாஸ் குழுவைச் சந்தித்த பின்னர் அன்வார் நிருபர்களிடம் பேசினார். அந்தக் குழுவுக்கு ஹாமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் டாக்டர் வாலிட் அலாமுடி தலைமை தாங்கினார்.

காசாவில் இஸ்ரேலிய குண்டு வீச்சினால் சேதமடைந்த நூர் அல் ஹமிடி பள்ளிவாசலை மீண்டும் கட்டுவதற்கு 700,000 அமெரிக்க டாலரை (2.175 மில்லியன் ரிங்கிட்) ஒர் அரசு சாரா அமைப்பான Aqsa Syarif ஹாமாஸ் குழுவிடம் வழங்கியது.