கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் பகுதியில் எம்ஆர்டி திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்று பாசார் செனி எம்ஆர்டி நிலைய கட்டுமானத் தளத்தைச் சுற்றிலும் 150 மீட்டர் நீளத்துக்கு ‘பெருஞ்சுவரை’ நிர்மாணித்தது.
செங்கற்கள் வரையப்பட்ட நீண்ட மஞ்சள் நிற பதாதையில் அந்த ‘சுவர்’ கட்டப்பட்டது. அதில் எம்ஆர்டி எதிர்ப்பு சுலோகங்கள் எழுதப்பட்டிருந்தன. “நீங்கள் எங்களை நில வரைபடத்திலிருந்து அழிக்கின்றீர்கள்’, ‘நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும்’, எம்ஆர்டியைக் கிண்டல் செய்யும் வகையில் ‘Mari Rampas Tanah’ (வாருங்கள் நிலத்தை அபகரிப்போம்) போன்ற வாசகங்கள் அவற்றுள் அடங்கும்.
“நாங்கள் சீனப் பெருஞ்சுவர் போன்றவர்கள். நாங்கள் இங்கு வாழ்கிறோம். தொடர்ந்து வாழவும் விரும்புகின்றோம். நாங்கள் எங்கள் பலத்தைக் காட்டுகின்றோம். ஜாலான் சுல்தானைப் பாதுக்காக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்,” என ஜாலான் சுல்தான் பாதுகாப்புக் குழு இணைத் தலைவர் ஸ்டான்லி யோங் அங்கு கூடியிருந்த 300 ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கூறினார்.
பாரம்பரியச் சிறப்பு மிக்க அந்தப் பகுதியில் எம்ஆர்சி கட்டப்படுவதற்கு அந்தக் குழு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் அருகில் கட்டப்படும் 118 மாடி வாரிசான் மெர்தேக்கா திட்டமும் கைவிடப்பட வேண்டும் என்றும் கோலாலம்பூர் மேயரைத் தெரிவு செய்ய ஊராட்சிமன்றத் தேர்தல்கள் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.