பக்காத்தான் ராக்யாட்டின் தலைமைப் பரப்புரையாளரான அன்வார் இப்ராஹிம், தமக்கு எதிராக இப்போது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களைப் பார்க்கும் போது தமது எதிரிகள் மூலை முடுக்குகளிலிருந்தும் வெளியாகிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது எனக் கூறுகிறார்.
என்றாலும் தாம் உறுதியாகவும் பொறுமையாகவும் இருக்கப் போவதாக அவர் நேற்றிரவு செபாராங் பிராயில் மகளிர் எழுச்சிக் ( Kebangkitan Wanita ) கூட்டம் ஒன்றில் பேசிய போது சொன்னார்.
தமக்கு எதிராக தொடுக்கப்படும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களைக் கண்டு மனம் தளராது வேடிக்கையாகவும் பேசிய அவர், பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இறுதிக் கட்டப் பிரச்சாரத்தைத் தாம் தீவிரப்படுத்தியுள்ளதாகச் சொன்னார்.
“பருவ நிலை மாற்றத்தைத் தவிர எல்லாவற்றுக்கும் அவர்கள் என்னைக் குறை கூறி வருகின்றனர். சபாவில் கள்ளக் குடியேறிகளுக்கு அடையாளக் கார்டுகளைக் கொடுத்தது முதல் சிரியாவில் இஸ்ரேல் குண்டு வீசுவது உட்பட எல்லாவற்றுக்கும் நான் காரணம் என அவர்கள் சொல்கின்றனர்,” என அவர் சொன்ன போது கூட்டத்தினர் சிரித்து விட்டனர். தமக்கு எதிராகச் சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் பட்டியலையும் அவர் அப்போது தந்தார்.
எதிரிகள் என்ன குற்றச்சாட்டுக்களை வீசினாலும் தாம் உறுதியாக இருந்து தமது செய்தியை வழங்கப் போவதாக அந்த எதிர்த்தரப்புத் தலைவர் சொன்னார்.
“சபாவில் வாக்களிப்பதற்காக மக்களுக்கு நீல நிற அடையாளக் கார்டு கொடுக்கப்பட்டதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அந்தப் பணியை பணிக்குழு ஒன்று மேற்கொண்டது. அதற்கு டாக்டர் மகாதீர் முகமட் தான் பொறுப்பு, நான் அல்ல.”
“அவர்கள் தங்கள் விருப்பம் போல் எதனை வேண்டுமானாலும் சொல்லட்டும். மக்களே நீதிபதிகள். இந்த நாட்டை மீண்டும் சரியான பாதையில் வைக்க நானும் பக்காத்தான் ராக்யாட்டில் உள்ள என் தோழர்களும் உறுதி பூண்டுள்ளோம்,”என்றார் அன்வார்.
கூடுதலான மகளிர் வேட்பாளர்கள்
இந்த நாட்டுக்கு புதுவாழ்வு கொடுப்பதற்கு மகளிர் முக்கியப் பங்காற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர், வரும் தேர்தலில் “தேர்ச்சி பெற்ற ஆற்றல் மிக்க” அதிகமான பெண் வேட்பாளர்களை பிகேஆர் நிறுத்தும் என்றும் தெரிவித்தார்.
“இந்த நாட்டை வளப்படுத்துவதில் பெண்கள் ஆண்களுக்கு இணையான பங்கை ஆற்றுகின்றனர். அவர்கள் மனைவியாகவும் புதல்விகளாகவும், சகோதரிகளாகவும் விளங்குகின்றனர். ஆகவே அவர்களுக்கு என்ன நேர்ந்தாலும் அது ஆண்களையும் பாதிக்கிறது.”
“அவர்கள் பிரச்னைகளை எதிர்நோக்கினால் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். இல்லை என்றால் நமது பிள்ளைகளுடைய எதிர்காலம் சிக்கலாகி விடும்,” என்றும் அன்வார் சொன்னார்.
பெண்களுடைய ஆற்றலுக்கும் தேர்ச்சிகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் தேசியப் புத்தாக்கத்தில் மகளிரும் பங்காற்றுவதற்கு பக்காத்தான் அரசாங்கம் வகை செய்யும் என்றும் அவர் உறுதி அளித்தார்.