பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இந்திய மலேசியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் என்று “பாலிவூட் திரைப்படங்களில் வருவதுபோல் ‘சீன் போடுகிறாராரே’ தவிர அவர்களின் வருந்தத்தக்க நிலைமைக்குத் தீர்வுகாண முயலவில்லை” என பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கூறினார்.
“ஆயிரக்கணக்கானோர் சட்டப்படி தகுதி இருந்தும் குடியுரிமை பெறாதிருக்கும் நிலையில் சொத்துரிமை அதிகரிக்கப்படும் தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதியுதவி கூட்டப்படும் என்று பிரதமர் வாக்குறுதிகள் வழங்குவது எதற்கு?”, என்றவர் வினவினார்.
இந்தியர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவதாக வாக்குறுதிகளை அளித்து அவர்களைச் சாந்தப்படுத்தி அதன்வழி தேர்தலில் அவர்களின் வாக்குகளைப் பெறுவதுதான் நஜிப்பின் திட்டமாகும் என்று சுரேந்திரன்(வலம்) குறிப்பிட்டார்.
பிரதமர் நினைத்தால் ஒரே கையெழுத்தில் இந்தியர்களின் துயரங்களுக்கு உடனடி தீர்வுகாண முடியும்.
“ஆனால், அது நடக்கும் எனத் தெரியவில்லை”, என்றாரவர்.
“அதற்குப் பதிலாக வெறும் வாக்குறுதிகளைத்தான் கேட்கிறோம்”.
நீதிமுறைக்கு ஒரு களங்கம்
எதை முதலில் செய்ய வேண்டுமோ அதைச் செய்வதுதான் முறையாகும் என்று சுரேந்திரன் கூறினார்.
“மலேசியாவில் நாடற்றவர்களாக உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அடிப்படைக் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரக் கவனிப்பு கிடைக்க வகை செய்ய வேண்டும்.
“இதுவே இத்தருணத்தின் அவசியத் தேவை”, என்பதை அவர் வலியுறுத்தினார்.
போலீஸ் காவலில் இருப்போர் மரணமுறும் சம்பவங்கள் தொடர்வது “நமது குற்றவியல் நீதிமுறைக்கு ஒரு களங்கமாக அமைகிறது. அதிலும் இந்திய மலேசியர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்”, என்றாரவர்.
சுரேந்திரன், போலீஸ் காவலில் இறந்துபோனவர்களின் வழக்கை எடுத்து வாதாடுவதில் முனைப்புக் காட்டுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போது அவர், போலீஸ் காவலில் இருந்தபோது இறந்துபோன ஏ.குகன். சி.சுகுமாரன் ஆகியோரின் குடும்ப வழக்குரைஞராக அவர்களின் வழக்கைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.