‘பிஎன் சபாஷைக் காப்பாற்ற 3.41 பில்லியன் ரிங்கிட் செலவு செய்துள்ளது’

syabasபிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor-க்கு கூடுதல் ஒதுக்கீடாக 120 மில்லியன் ரிங்கிட்டை அறிவித்துள்ளார். அந்தத் தொகையையும் சேர்த்தால் அந்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்கு கூட்டரசு அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 3.41 பில்லியன் ரிங்கிட்டை செலவு செய்துள்ளது என டிஏபி கூறிக் கொண்டுள்ளது.

அது சபாஷ் நிறுவனத்தின் திறமையின்மையையும் பிஎன் தொடர்ந்து தனது சேவகர்களுக்கு ஆதரவளிப்பதையும் காட்டுவதாக அந்தக் கட்சியின் தேசியப் பிரச்சாரப் பிரிவுச் செயலாளர் டோனி புவா சொன்னார்.

மிக அதிகமான 9 பில்லியன் ரிங்கிட் செலவு பிடிக்கும் லங்காட் 2 திட்டத்துக்கு பாகாங்கிலிருந்து தண்ணீரை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் எனக் கூறப்படும் சுத்திகரிக்கப்படாத தண்ணீர் பற்றாக்குறைக்கும் அந்த சிலாங்கூர் கோலாலம்பூர் தண்ணீர் நெருக்கடிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை சபாஷ்-க்கு கொடுக்கப்பட்டுள்ள 120 மில்லியன் ரிங்கிட் மெய்பிப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

“அந்த நெருக்கடிக்கு சபாஷ் தனது நீர் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்தவும் சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்குவதற்கு கூடுதல் வசதிகளை செய்யவும் பழைய, உடைந்த குழாய்களை பழுதுபார்க்கவும் முதலீடுகளைச் செய்யாததே காரணமாகும்.”

“அந்த நடவடிக்கைகளுக்கு 120 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது சபாஷ் தனது சொந் த நிதிகளைப் பயன்படுத்தியிருந்தால் நடப்பு நெருக்கடியை தவிர்த்திருக்க முடியும்.”

அரசாங்கத்துக்கும் சபாஷ்-க்கும் இடையிலான நீர் வளச் சலுகை ஒப்பந்தத்தின் கீழ் சபாஷ் தண்ணீர் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு கூட்டரசு அரசாங்கமோ மாநில அரசாங்கமோ மானியமோ கடனோ கொடுக்க வேண்டிய கடமை ஏதுமில்லை என்றும் புவா சொன்னார்.syabas1

எனவே சபாஷ்-க்கு வழங்கப்பட்டுள்ள 120 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு சிலாங்கூர் மக்களுக்கு உதவும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. மாறாக சபாஷ் நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட    நடவடிக்கை ஆகும் என புவா வலியுறுத்தினார்.

சபாஷ் நிறுவனத்தை நிலைத்திருக்கச் செய்வதற்கு பிஎன் கூட்டரசு அரசாங்கம் கடந்த காலத்தில் வழங்கிய ‘நிதிகளையும்’ அவர் பட்டியலிட்டார்.

“2009 டிசம்பர் மாதம் பிஎன் அரசாங்கம் வட்டி இல்லாத 20 ஆண்டு கால 320.8 மில்லியன் ரிங்கிட் எளிய கடனை சபாஷ்-க்கு வழங்கியது.”

“2011 அக்டோபர் மாதம் பிஎன் அரசாங்கம் அதே நோக்கத்துக்காக 20 ஆண்டு கால 320.8 மில்லியன் ரிங்கிட் கடனை சபாஷ்-க்கு மீண்டும் வழங்கியது.”

“சபாஷ் வெளியிட்ட 2.9 பில்லியன் ரிங்கிட் பெறும் கடன் பத்திரங்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய நெருங்கிய போது கூட்டரசு அரசாங்கம் அந்த 2.9 பில்லியன் ரிங்கிட் பெறும் கடன் பத்திரங்களையும்   ஏற்றுக் கொண்டு சபாஷ் நிறுவனத்தைக் காப்பாற்றியது.”

“அதற்காக கூட்டரசு அரசாங்கம் கொடுத்த 2.9 பில்லியன் ரிங்கிட் தொடர்பில் சபாஷ் ஒரு சென் -னாவது திருப்பிக் கொடுத்ததா என இது வரை எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டர் சின் எந்தத்  தகவலையும் வெளியிடவில்லை.”

ஆகவே அந்த நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்கு இது நாள் வரை 3.41 பில்லியன் ரிங்கிட் செலவு செய்யப்பட்டுள்ளது என புவா வலியுறுத்தினார்.

சபாஷ் தனது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியுள்ளதால் அதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகையை முடிவுக்குக் கொண்டு வர அல்லது அந்த நிறுவனத்தை எடுத்துக் கொள்ள பக்காத்தான் ராக்யாட் சிலாங்கூர்  அரசாங்கம் திரும்பத் திரும்ப முன் வந்தும் கூட்டரசு அரசாங்கம் சிலாங்கூர் யோசனைகளுக்கு ஆதரவளிக்க  மறுத்து வருகின்றது என புவா சொன்னார்.

“பிஎன் அரசாங்கம் தனது சேவகர்களுடைய ஆதாயத்தையும் நலன்களையும் பாதுகாப்பதற்கு சபாஷ் நிறுவனத்துக்கு பில்லியன் கணக்கான ரிங்கிட்டை வழங்கி அதனை உயிருடன் வாழச் செய்யும் என்பது எல்லா  மலேசியர்களுக்கும் தெரிந்து விட்டது.”

“பிஎன் சேவகர்களுடைய நலன்களுக்கு மேலாக மக்கள் நலனைக் கருத்தில் கொள்ள நஜிப் தயாராக இல்லை என்பதை கடந்த நான்கு ஆண்டுகள் காட்டி விட்டதால் அவருடைய பொருளாதார உருமாற்றத் திட்டங்கள் அனைத்தும் முழுமையான போலித்தனம்,” என அவர் மேலும் சொன்னார்.