சரவாக் பிகேஆர், தன் வேட்பாளர்கள் சில தொகுதிகளில் மீட்டுக்கொள்ளப்பட்டார்கள் என்றும் பணம் கொடுத்து வாங்கப்பட்டார்கள் என்றும் மாநில பிஎன் வதந்திகளைப் பரப்பி வருவதாக சாடியுள்ளது.
“பக்காத்தானின் வருகையால் கலக்கமடைந்த அவர்கள் அசிங்கமான அரசியல் நடத்தத் தொடங்கியுள்ளனர்”, என்று சரவாக் பிகேஆர் தலைவர் பாரி பியான் (வலம்) கூறினார்.
“நடுநடுங்கிப்போன அவர்கள் எங்கள் வேட்பாளர்கள் மீட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறி மக்களிடையே, குறிப்பாக எங்கள் உறுப்பினர்களிடத்திலும் வாக்காளார்களிடையேயும் குழப்பத்தை உண்டுபண்ண முயல்கிறார்கள்.
“இது முக்கியமான தேர்தல், நாங்கள் மத்திய அரசையே மாற்றப்போகிறோம் என்பதால் இப்படிச் செய்கிறார்கள்”.
மம்போங்கில் போட்டியிடப்போவதாகக் கூறப்படும் வில்லி மோகின், லூபோக் ஹந்துவில் போட்டியிடும் நிக்கோலஸ் பவின் ஆகியோர் போட்டியிடுவதினின்றும் விலகிக்கொண்டார்கள் என்று கூறப்படுவதை இருவருமே திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
“சில வேட்பாளர்கள் பிஎன்னுடன் சமரசம் செய்து கொள்வார்கள் என்று கூறப்படுவது பிஎன் பரப்புரையாகும். ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 2008 தேர்தலில் நாங்கள் பாடம் கற்றுக்கொண்டோம். அதனால், வேட்பாளர்கள் எல்லாருமே வடிகட்டித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்”, என்று பியான் கூறினார்.
“எங்கள் வேட்பாளர்கள் அனைவருமே நம்பிக்கைக்குரியவர்கள், நேர்மையானவர்கள். 50 ஆண்டுகள் பிஎன் ஆட்சியில் இருந்தது போதும்”.
அம்மாநிலத்தில் பிஎன் ஆட்டம் கண்டு போயிருப்பதாக பியான் சொன்னார்.
“மக்கள் எங்கள் பக்கம் இருப்பதை அவர்கள் அறிவார்கள். நாங்கள் தேர்தலுக்கு ஆயத்தமாக இருப்பதும் அவர்களுக்குத் தெரியும். எங்களின் எல்லாத் தொகுதிகளிலும் தேர்தல் இயந்திரங்களும் சேவை மையங்களும் முடுக்கி விடப்பட்டுள்ள.
“நாங்கள் போட்ட்டியிடாத தொகுதிகளில்கூட தேர்தல் இயந்திரங்களை அமைத்துள்ளோம். எங்கள் பங்காளிக் கட்சிகளுக்கு உதவியாக அவற்றை அமைத்துள்ளோம்.
“இதையெல்லாம் கண்டுதான் பிஎன் பயந்து போயுள்ளது. சில தொகுதிகளில் பிஎன் பிரச்னைகளை எதிர்நோக்குவதாக முதலமைச்சரே (அப்துல் தாயிப் மஹ்மூட்) ஒப்புக்கொண்டிருக்கிறார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிகேஆர் 10-12 இடங்களிலும் டிஏபி 12 இடங்களிலும் போட்டியிட விரும்புகின்றன. எஞ்சிய இடங்களில் பாஸ் போட்டியிடும்.
சரவாக்கில் மொத்தம் 31 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. தற்போது மாற்றரசுக் கட்சியிடம் இரண்டு தொகுதிகள் மட்டுமே உள்ளன. ஒன்று பண்டார் கூச்சிங், மற்றது சிபு.
வரும் தேர்தலில் பக்காத்தான் 10 இடங்களை வெல்ல இலக்குக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஆறு சீன வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களாகும்.