பாஸ் கட்சி ‘அல்லாஹ்’ சர்ச்சையை உள்துறை அமைச்சுக்குத் தள்ளிவிடுகிறது

christபைபிள் மலாய் பதிப்புக்களில் ‘அல்லாஹ்’ என்ற சொல் பயன்படுத்தப்படுவது அனுமதிக்கப்பட வேண்டுமா என்பது மீதான கேள்விகளை ஒதுக்கிய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அது உள்துறை அமைச்சின் தனியுரிமை என்றும் கட்சியின் உரிமை அல்ல என்றும் சொன்னார்.

“அந்தக் கேள்வியை நீங்கள் உள்துறை அமைச்சரிடம் எழுப்ப வேண்டும். முடிவு அவர்களைப் பொறுத்தது. நாங்கள் முடிவு செய்வதில்லை. நாங்கள் இன்னும் ஆட்சி (புத்ராஜெயா) புரியவில்லை,” என அப்துல் ஹாடி ஷா அலாமில் நிருபர்களிடம் கூறினார்.

‘அல்லாஹ்’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என பாஸ் கட்சியின்  syura மன்றம் எடுத்த முடிவு பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது அப்துல் ஹாடி அவ்வாறு பதிலளித்தார்.

இஸ்லாமிய அறிஞர்கள் உறுப்பியம் பெற்றுள்ள syura மன்றம் கொள்கை விவகாரங்கள் மீது கட்சியின் மத்தியக் குழு எடுத்த முடிவுகளை மாற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

அந்த மன்றம் முடிவு செய்வதற்கு முன்னதாக முஸ்லிம் அல்லாதார் அந்த சொல்லைத் தவறாக பயன்படுத்தாத வரையில் அதனை பயன்படுத்தலாம் என மத்தியக் குழு தீர்மானித்துள்ளதாக அப்துல் ஹாடி அறிவித்தார்.

அதனை பக்காத்தான் தலைமைத்துவமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

முக்கியமான தரப்பாக உள்துறை அமைச்சு இருக்கும் வேளையில் அந்த விவாதத்தில் பாஸ் இழுக்கப்பட்டுள்ளதாக அப்துல் ஹாடி கூறிக் கொண்டார்.

“அந்த விவாதத்தில் எங்களை ஏன் இழுக்க வேண்டும் ?” என அவர் வினவினார்.