ஜோகூரைப் பக்காத்தான் சுனாமி தாக்கக்கூடும்

1pakatanகருத்துரைப்பவர் LIEW CHIN TONG

பிஎன்னின் கடைசிக் கோட்டையாக விளங்குவது ஜோகூர். ஆனால்,வரும் தேர்தலில் அது வெறும் மணல் கோட்டையாக மாறலாம்.

பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஜோகூரில் 35விழுக்காடு மலாய் ஆதரவும், 80விழுக்காட்டு சீனர் ஆதரவும், 50விழுக்காடு இந்தியர் ஆதரவும் கிடைத்தால் 20 நாடாளுமன்ற தொகுதிகள் அதன் கைக்கு எளிதில் வந்துவிடும்.

அது நடந்தால், பக்காத்தானுக்கு நாடாளுமன்றத்தில் மிகவும் தேவைப்படும் 112 இடங்கள் கிடைத்துவிடும். தீவகற்ப மலேசியாவில் கைவசமுள்ள இடங்களைக் கொண்டே அடுத்த அரசாங்கத்தையும் அதனால் அமைக்க முடியும்.

1pakatan11994-இலும் 2003-இலும் இரண்டு தடவை தொகுதி எல்லைகள் திருத்தப்பட்டு பிஎன்னுக்குச் சாதகமாக இருக்கும் வகையில் பலஇனத் தொகுதிகள் பல உருவாக்கப்பட்டன.பிஎன்னுக்குத்தான் பலஇனக் கவர்ச்சி உண்டு என்றும் பக்காத்தான் கட்சிகள் இன எல்லையைத்தாண்டிச் செல்ல இயலாது என்றும் கருதப்பட்டது.

பிஎன் கட்டுப்பாட்டில் இருந்த ஊடகங்கள் பாஸ் கட்சியை மலாய்க்காரர்-அல்லாதாருக்கு ஆகாத ஒன்றாகவும் டிஏபி-யை மலாய்க்காரர் நலனுக்கு மிரட்டல் என்பது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தன. 2008-க்கு முன்பு பாஸ் ஆதரவாளர்கள் டிஏபி-க்கு வாக்களிப்பதும் டிஏபி ஆதரவாளர்கள் பாஸுக்கு வாக்களிப்பதும் அரிதினும் அரிதாகவே இருந்தது.

ஆனால், 2008 பொதுத் தேர்தலில் ஏற்பட்டது பெரிய மாற்றம்.  “அம்னோவைத் தவிர வேறு எதற்கும்” என்ற தீர்மானத்தில் இருந்த சீன, இந்திய வாக்காளர்கள் அப்படியே பாஸ் பக்கம் சென்றதையும் நகர்ப்புற மலாய்க்காரர்கள் முதல்முறையாக டிஏபி-க்கு ஆதரவாக வாக்களித்த அதிசயத்தையும் கண்டோம்.  நெகிரி செம்பிலானுக்கு வடக்கேயும் தீவகற்ப மலேசியாவின் மேற்குக் கரைப்பகுதியிலும் பல பல்லினத் தொகுதிகள் மாற்றரசுக் கட்சியின் கைக்குள் வந்தன..

பக்காத்தான் ஜோகூரை வெல்லும் வழி

2013 தேர்தலில், சாபாவும் ஜோகூரும் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் இரண்டு முக்கிய போர்க்களங்களாக விளங்கும். இப்போது கவனம் மொத்தமும் சாபா பக்கம்தான் திரும்பியுள்ளது. ஆனால், இட ஒதுக்கீடு விவகாரத்தின் விளைவாக அங்கு மாற்றரசுக் கட்சிகளிடையே ஒத்துழைப்பு வலுவடைவது தடைப்படலாம். ஆனால், ஜோகூரில் நிலைமை வேறு.

ஜோகூரின் 26 நாடாளுமன்ற தொகுதிகளில் எட்டு மட்டுமே 60விழுக்காட்டுக்கும் அதிகமான மலாய்க்கார வாக்குகளைக் கொண்டுள்ளன. பக்காத்தானுக்கு இப்போதுள்ள ஆதரவை வைத்து அவற்றை வெல்வது கடினம். மேலும், 60விழுக்காட்டுக்குமேல் சீன வாக்காளர்களைக் கொண்ட தொகுதி என்று எதுவும் ஜோகூரில் இல்லை.

எனவே, மலாய்க்காரர்-அல்லாதார் ஆதரவு பெருமளவு இருந்து மலாய்க்கார்களின் ஆதரவு குறைந்தது 25விழுக்காடாவது கிடைத்தால் மட்டுமே ஜோகூரில் பக்காத்தானால் பெரிய வெற்றியைக் காண முடியும். இல்லையென்றால் ஒரு சில தொகுதிகளுடன் திருப்தி அடைய வேண்டியதுதான். 2008 தேர்தலில் ஜோகூரில் பக்காத்தானுக்கு இருந்த மலாய்க்காரர்களின் ஆதரவு சுமார் 20 விழுக்காடுதான்.

அதேவேளை, மலாய்க்காரர் ஆதரவு 35 விழுக்காடாக இருந்தால், எதுவும் நடக்கலாம். 35விழுக்காடு ,மலாய்க்காரர் ஆதரவைப் பெறுவது கடினமான செயல், என்றாலும் சாத்தியமற்றதல்ல.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் ஜோகூரில் பக்காத்தானுக்கு மலாய்க்காரர் ஆதரவு 30 விழுக்காட்டைத் தாண்டிச் சென்றிருப்பதைக் காட்டியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆதரவும் கட்சிக்கு கட்சி மாறுபடுகிறது. பாஸ் கட்சிக்கு மலாய்க்காரர் ஆதரவு சராசரி அளவைக் காட்டிலும் அதிகம். மறுபுறம் சீனர்களுக்கு அந்த ஆதரவு சராசரி அளவைவிட குறைவுதான்.

ஒன்றுபட்டால் உண்டு வெற்றி

அதே கருத்துக்கணிப்பு, பக்காத்தானுக்கு சீனர்களின் ஆதரவு சுமார் 70விழுக்காடு என்பதையும் காண்பித்தது. அந்த ஆதரவும் கட்சிக்குக் கட்சி மாறுபடுகிறது. டிஏபிக்கு அவர்களின் ஆதரவு சராசரி அளவைக் காட்டிலும் அதிகம். பாஸ் கட்சிக்கு ஆதரவு உண்டு ஆனால், சராசரி அளவைவிட குறைவு. இந்தியர்களின் ஆதரவு 50 விழுக்காடு பக்காத்தானுக்குத்தான்.

1pakatan2தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த இடைவெளி மேலும் சுருங்கலாம். அதற்கு டிஏபி-யும், பாஸும், பிகேஆரும் தத்தம் ஆதரவாளர்களை பங்காளிக் கட்சிகளுக்கும் வாக்களிக்கும்படி செய்ய வேண்டும்.

இடப்பக்கமுள்ள விளக்கப்படம் ஜோகூரில் என்ன நிகழலாம் என்பதற்கு ஒரு கணக்குத்தான். பக்காத்தானுக்கு இந்தியர்களின் ஆதரவு 50 விழுக்காடு என்று தொடர்ந்து இருக்கும் என்ற அனுமானத்தில் செய்யப்பட்ட ஒரு கணக்கு இது.

காகிதத்தில் போடப்படும் புள்ளிக்கணக்குத்தான். ஆனால், பாரிசான் நேசனலின் கோட்டையாக இருந்தாலும், அதுவும் சரிந்து விடலாம் என்பதைத்தான் இது காட்டுகிறது.

====================================================================================================

LIEW CHIN TONG புக்கிட் பெண்டாரா நாடாளுமன்ற உறுப்பினர்